நீலகிரியில் நடப்பாண்டில் விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி கடன் வழங்க இலக்கு - கலெக்டர் தகவல்
நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு நடப்பாண்டில் ரூ.1,500 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 14–ந் தேதி முதல் வருகிற 20–ந் தேதி வரை 65–வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ‘வளமான ஊரக வளர்ச்சியைக்காண, கூட்டுறவு அமைப்புகளின் வாயிலான அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நல்லாட்சி’ என்ற கருப்பொருளுடன் நடைபெறுகிறது. இதையொட்டி கூட்டுறவு வார விழா ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆர்.கணேஷ், சாந்தி ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ரூ.1 கோடியே 74 லட்சம் மதிப்பில் 357 பயனாளிகளுக்கு சுயஉதவிக் குழு கடன், டாப்செட்கோ மகளிர் மற்றும் ஆடவர் சுய உதவிக்குழு கடன், மத்திய கால கறவை மாட்டுக் கடன் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நீலகிரி மாவட்டத்தில் 13 கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் 146 மையங்கள் மூலம் நடப்பாண்டில் விவசாயிகளுக்கு ரூ.32 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. நகர கூட்டுறவு வங்கிகள் சார்பில் ரூ.10 கோடி கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. நீலகிரியில் 82 கூட்டுறவு சேவை மையங்களும், 3 அம்மா மருந்தகங்களும் இயங்கி வருகிறது. 3 அம்மா மருந்தகம் மற்றும் கூட்டுறவு மருந்தகம் சார்பில், 15 சதவீத தள்ளுபடி விலையில் மருந்து, மாத்திரைகள் ரூ.95 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
கூட்டுறவு சங்கத்தின் மூலம் 237 முழு நேர ரேஷன் கடைகள், 95 பகுதி நேர ரேஷன் கடைகள், 14 நடமாடும் ரேஷன் கடைகளும் செயல்பட்டு வருகின்றது. மத்திய அரசின் வணிக வங்கிகள் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு துரிதமாக கடன் வழங்கவில்லை என்பதால், மத்திய அரசு வழங்கிய தூய்மை பாரத திட்டத்தின் நிதி ரூ.2½ கோடி கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. மேலும் நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு நடப்பாண்டில் ரூ.1,500 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கிராமப்பகுதிகளில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறை கட்ட மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை சம்பந்தப்பட்டவர்கள் வங்கிகளில் செலுத்தாமல் உள்ளனர். இந்த கடனை வசூலிக்க மகளிர் திட்ட அதிகாரிகள் உடன் இணைந்து செயல்பட இருக்கின்றனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் இயற்கை விவசாயமாக மாற்ற 150 கூட்டுறவு சங்கங்கள் மூலம் முதல் கட்டமாக 25 சதவீத இயற்கையான இடுபொருட்கள் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சிறந்த கூட்டுறவு வங்கிகளான மத்திய கூட்டுறவு வங்கி, குன்னூர் நகர கூட்டுறவு வங்கி மற்றும் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
இதில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் லோகநாதன், துணை பதிவாளர்கள் நீலா, துரைசாமி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஆல்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ் பேசும்போது, நீலகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக கலெக்டர் வேகமாக பணிகளை மேற்கொண்டு வருகிறார். மஞ்சூர் பரமூலா, ஓணிக்கண்டி ஆகிய 2 இடங்களில் பகுதி நேர ரேஷன் கடைகளை தொடங்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் நான் கலெக்டரிடம் மனு கொடுத்தேன். இந்த மனு கலெக்டர் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு பல நாட்களாகியும் ரேஷன் கடைகளை திறக்க அதிகாரிகள் கலெக்டருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் செயல்படுகின்றனர். இது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றார். முன்னதாக கஜா புயலில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.