பரங்கிப்பேட்டையில் ரூ.50 லட்சத்தில் படகுதளம்: தேர்வு செய்யப்பட்ட இடத்தை கடலோர காவல்படை சூப்பிரண்டு ஆய்வு


பரங்கிப்பேட்டையில் ரூ.50 லட்சத்தில் படகுதளம்: தேர்வு செய்யப்பட்ட இடத்தை கடலோர காவல்படை சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 18 Nov 2018 4:12 AM IST (Updated: 18 Nov 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

பரங்கிப்பேட்டையில் ரூ.50 லட்சத்தில் படகு தளம் கட்டப்பட உள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை கடலோர காவல்படை சூப்பிரண்டு சின்னசாமி ஆய்வு செய்தார்.

கடலூர் முதுநகர்,

பரங்கிப்பேட்டையில் கடலோர காவல்படைக்கு சொந்தமான அதிநவீன படகை நிறுத்துவதற்காக படகு தளம் கட்ட தமிழக அரசு ரூ.50 லட்சம் ஒதுக்கியது. இதையடுத்து படகு தளம் கட்டுவதற்கான இடம் ஏற்கனவே தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை ஆய்வு செய்வதற்காக தமிழக கடலோர காவல்படை சூப்பிரண்டு சின்னசாமி நேற்று பரங்கிப்பேட்டைக்கு வந்தார்.

பின்னர் அவர், ஏற்கனவே தேர்வு செய்து வைக்கப்பட்டிருந்த பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் பகுதியை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அவர், படகு தளம் கட்டுவது தொடர்பாக மீனவர்களிடமும், அப்பகுதி மக்களிடமும் கருத்து கேட்டார். அதற்கு மீனவர்களும், மக்களும் படகு தளம் கட்ட சம்மதம் தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது துணை சூப்பிரண்டு பாலமுருகன், இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், மீன்வளத்துறை உதவி செயற்பொறியாளர் குருமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

இது குறித்து கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ரூ.50 லட்சத்தில் படகு தளம் கட்டும் பணி 10 நாட்களுக்குள் தொடங்கப்படும். இந்த பணி 6 மாதத்திற்குள் முடிவடையும். இந்த படகு தளத்தில் கடலோர காவல் படைக்கு சொந்தமான 19 மீட்டர் நீளமுள்ள அதிநவீன படகை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கலாம். ஆழ்கடலில் மீனவர்கள் சிக்கி தத்தளித்தால், இந்த அதிநவீன படகில் விரைந்து சென்று அவர்களை மீட்க முடியும். அதேபோல் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், கடத்தல்காரர்களை தடுக்கவும் விரைந்து செயல்பட இந்த அதிநவீன படகு பயன்படும். இதேபோல் கடலூர் துறைமுகத்திலும் அதிநவீன படகு நிறுத்தி வைக்கப்படும். இதற்காக 2 அதிநவீன படகுகள் வாங்கப்பட உள்ளது என்றார்.


Next Story