கஜா புயல்: தமிழக அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்ப்பு - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு


கஜா புயல்: தமிழக அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்ப்பு - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
x
தினத்தந்தி 18 Nov 2018 5:15 AM IST (Updated: 18 Nov 2018 4:37 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் புயல் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

சிவகாசி,

சிவகாசியில் கூட்டுறவு வாரவிழா நடந்தது. கலெக்டர் சிவஞானம் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார்.

விழாவில் 60 சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன. கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற 29 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் 1,809 பேருக்கு ரூ.10 கோடியே 93 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இவற்றை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் வழங்கினர்.

அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில்,

சாதாரண மக்களும் உறுப்பினராகும் வகையில் கூட்டுறவு துறை தமிழகத்தில் உயிர் பெற்றுள்ளது, சாதாரண மக்களும் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் சங்கங்களில் தலைவர்களாக இருப்பது இந்த அரசால் மட்டும் சாத்தியமாகிறது என்றார்.

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:–

கஜா புயல் வருவதற்கு முன்னரே அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு கடலோர மாவட்டங்களுக்கு கோடிக்கரை, நாகை, ராமேசுவரம், மண்டபம் என பகுதி வாரியாக நவீன மீட்பு கருவிகளுடன் நீச்சல் வீரர்கள், மீட்புபடை வீரர்கள், பேரிடர் மேலாண்மை பணியாளர்களை அனுப்ப முதல்–அமைச்சர் ஆணையிட்டார். அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர், பால்வளத்துறை, கூட்டுறவு, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் குழுக்கள் அமைத்தும், சென்னை முதல் கன்னியாகுமரி வரை தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளை எடுத்தும் மிகப்பெரிய சேதம் எதுவும் இல்லாமல் தவிர்க்கப்பட்டு மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

எந்த ஒரு இயற்கை சீற்றம் வந்தாலும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, தமிழக மக்களை பாதுகாக்கின்ற ஒரு அரணாக அரசு உள்ளது.

விழாவில் சந்திரபிரபா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திலீப்குமார், துணைப்பதிவாளர் ராமநாதன், இணைப்பதிவாளர் செந்தில்குமார், சிவகாசி கோட்டாட்சியர் தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராமநாதன் கூட்டுறவு உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் உறுதி எடுத்துக் கொண்டனர்.


Next Story