26 அடியை தொட்டது: சாத்தியாறு அணை முழு கொள்ளளவை எட்டுமா?


26 அடியை தொட்டது: சாத்தியாறு அணை முழு கொள்ளளவை எட்டுமா?
x
தினத்தந்தி 18 Nov 2018 4:37 AM IST (Updated: 18 Nov 2018 4:37 AM IST)
t-max-icont-min-icon

அலங்காநல்லூர் அருகே உள்ள சாத்தியாறு அணை 26 அடியை தொட்ட நிலையில், முழு கொள்ளளவை எட்டுமா என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளன.

அலங்காநல்லூர்,

அலங்காநல்லூர் அருகே சாத்தியார் அணை உள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 29 அடியாகும். சிறுமலை தொடர்ச்சி, வகுத்துமலை, மஞ்சள் மலை, செம்பூத்துகரடு மற்றும் சாத்தியாறு நீர்வரத்து கால்வாய் ஆகிய பகுதிகளில் இருந்து தண்ணீர் வரும். கஜா புயல் காரணமாக பெய்த கனமழையினால் அணைக்கு வெள்ளமென நீர்வரத்து ஏற்பட்டது. மேலும் அணை பகுதியில் 6 செ.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. பலத்த மழையால் வறண்டு கிடந்த சாத்தியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. 2 நாளில் மட்டும் 20 அடி உயர்ந்து தற்போது அணையின் நீர்மட்டம் 26 அடியை எட்டியுள்ளது. மேலும் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.

இந்த அணை கடந்த 2008–ம் ஆண்டுக்கு தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில், தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வருவதால் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணையின் பாசன நீரால் கீழசின்னணம்பட்டி, எர்ரம்பட்டி, அய்யூர் உள்பட 10 கிராம கண்மாய் விவசாயிகள் பயனடைவார்கள். இதன் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வரை பாசன வசதி பெறும். சாத்தியாறு அணை நிரம்பி வரும் தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் நடராஜன், சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது வாடிப்பட்டி தாசில்தார் பார்த்தீபன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய தலைவர் ராம்குமார் மற்றும் விவசாய சங்கத்தினர் உடனிருந்தனர். மேலும் அணையின் நீர்வரத்து வாய்க்காலையும், தண்ணீர் கசிந்து வெளியேறும் மதகுகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.


Next Story