பரபரப்புக்கு இடையே நடந்த தேர்தல் : மைசூரு மாநகராட்சி மேயராக காங்கிரசை சேர்ந்த புஷ்பலதா தேர்வு


பரபரப்புக்கு இடையே நடந்த தேர்தல் : மைசூரு மாநகராட்சி மேயராக காங்கிரசை சேர்ந்த புஷ்பலதா தேர்வு
x
தினத்தந்தி 18 Nov 2018 4:47 AM IST (Updated: 18 Nov 2018 4:47 AM IST)
t-max-icont-min-icon

பரபரப்புக்கு இடையே நடந்த மைசூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தலில் காங்கிரஸ்/ஜனதாதளம் (எஸ்) கூட்டணி வெற்றி பெற்றது. மேயராக காங்கிரசை சேர்ந்த புஷ்பலதாவும், துணை மேயராக ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த சபி அகமதுவும் தேர்வு செய்யப்பட்டனர்.

மைசூரு,

மைசூரு மாநகராட்சிக்கு உட்பட்டு 65 வார்டுகள் உள்ளன. இந்த மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அதிகபட்சமாக பா.ஜனதா 22 வார்டுகளையும், காங்கிரஸ் 19 வார்டுகளையும், ஜனதாதளம் (எஸ்) 18 வார்டுகளையும் கைப்பற்றி இருந்தன. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி வாகை சூடியிருந்தனர். எந்த கட்சிக்கும் தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி அமைத்து மேயர், துணை மேயர் பதவியை கைப்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் ஏற்கனவே கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து மைசூரு மாநகராட்சியை கைப்பற்ற முடிவு செய்தது. இதற்கிடையே நவம்பர் 17-ந்தேதி (அதாவது நேற்று) மைசூரு மேயர், துணை மேயர் தேர்தல் நடத்தப்படும் என்று மண்டல கமிஷனர் யஷ்வந்த் அறிவித்தார். இதனால் மைசூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தல் களைக்கட்ட தொட்டங்கியது.

ஆனால் மேயர் பதவி யாருக்கு? என்பதில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகளுக்கு இடையே சிக்கல் ஏற்பட்டது. அதாவது தங்களுக்கே மேயர் பதவி வழங்க வேண்டும் என்று இரு கட்சியினரும் போர்க்கொடி தூக்கினர். இதை பயன்படுத்தி எப்படியாவது மைசூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகளை கைப்பற்ற பா.ஜனதா குதிரைபேரத்திலும் ஈடுபட்டது. இதற்கிடையே சுயேச்சை கவுன்சிலரான சமியுல்லா, காங்கிரசில் சேர்ந்தார். இதனால் காங்கிரஸ் கவுன்சிலர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

இருப்பினும் மேயர் பதவி எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரி கி்ருஷ்ணபைரேகவுடா மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் விடாப்பிடியாக இருந்தனர். அதே வேளையில் ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த மந்திரிகள் ஜி.டி.தேவேகவுடா, சா.ரா.மகேஷ் தலைமையில் அக்கட்சியினர் மேயர் பதவியை கைப்பற்ற தீவிரமாக களத்தில் இறங்கினர். மந்திரி சா.ரா.மகேஷ் பா.ஜனதா துணையுடன் மேயர், துணை மேயர் பதவிகளை கைப்பற்றுவோம் என்று மிரட்டல் விடுத் தார்.

இதனால் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து மைசூரு மேயர் தேர்தலை எதிர்கொள்ளுமா? அல்லது ஜனதாதளம் (எஸ்) கட்சி, பா.ஜனாவுடன் கூட்டணி அமைத்து மேயர், துணை மேயர் பதவிகளை கைப்பற்றுமா? என்ற பரபரப்பு மைசூரு மாநகர மக்கள் மத்தியில் தொற்றிக்கொண்டது.

மேலும் குதிரைபேரத்தில் இருந்து தப்பிக்கவும், கவுன்சிலர்கள் அணி மாறுவதை தடுக்கவும் ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 18 கவுன்சிலர்களையும் மந்திரி சா.ரா.மகேஷ் ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும் சுயேச்சை கவுன்சிலர்கள் 4 பேரும் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் மைசூரு மேயர், துணை மேயர் தேர்தல் களத்தில் அனல் பறந்தது. இதற்கிடையே முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மந்திரி ஜி.டி.தேவேகவுடாவை தொடர்பு கொண்டு கூட்டணி ஒப்பந்தப்படி மைசூரு மேயர் பதவியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்றும், காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற வாக்களிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். மேலும் இந்த தேர்தலில் எந்த பிரச்சினையும் ஏற்படக் கூடாது என்றும் அவர் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகைய பரபரப்புக்கு இடையே அறிவித்தப்படி நேற்று காலை 10 மணி அளவில் மைசூரு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கியது. இதனால் காலை 9.45 மணி அளவிலேயே ஜனதாதளம் (எஸ்) கவுன்சிலர்கள் பிடதியில் இருந்து சொகுசு பஸ்சில் வந்தனர். அவர்களுடன் மந்திரி ஜி.டி.தேவேகவுடா, மேல்-சபை உறுப்பினர்கள் சந்தேஷ் நாகராஜ், மரிதிப்பேகவுடா, ஸ்ரீகண்டேகவுடா ஆகியோரும் வந்திருந்தனர். அப்போது அக்கட்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கூட்ட அரங்கிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அவர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் ரவிக்குமாரை சக கவுன்சிலர்கள் சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.

அதுபோல் காங்கிரஸ் கவுன்சிலர்கள் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, தன்வீர்சேட் எம்.எல்.ஏ., மேல்-சபை உறுப்பினர் தர்மசேனா ஆகியோருடன் வந்தனர். மேலும் பா.ஜனதாவை சேர்ந்த கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஏ.ராமதாஸ், எல்.நாகேந்திரா ஆகியோருடன் கூட்ட அரங்கிற்கு வந்தனர். இந்த தேர்தலில் கவுன்சிலர்கள் மட்டுமின்றி எம்.பி. எம்.எல்.ஏ., மேல்-சபை உறுப்பினர்களும் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள். அதன் அடிப்படையில் காங்கிரசில் 21 பேரும், ஜனதாதளம் (எஸ்) கட்சியில் 22 பேரும், பா.ஜனதாவில் 24 பேரும் வாக்களிக்க தகுதி படைத்திருந்தனர்.

சரியாக காலை 11 மணி அளவில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. காங்கிரஸ் சார்பில் சாந்தகுமாரி, ஷோபா ஹாஜீரா சீமா, புஷ்பலதா ஜெகநாத் ஆகியோரும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் பாக்யா, லட்சுமி, அஸ்வினி, ருக்மணி, பிரேமா ஆகியோரும், பா.ஜனதா சார்பில் சுனந்தபாலநேத்ராவும் மேயர் பதவிக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

அதுபோல் துணை மேயர் பதவிக்்கு ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் சபி அகமது மனு தாக்கல் செய்தார். மேயர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததாலும், ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 5 கவுன்சிலர்களும் மேயர் பதவிக்கு போட்டியிட்டதாலும் இருகட்சியினர் மத்தியிலும் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் மனு தாக்கல் செய்த 5 பேரும், காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்த சாந்தகுமாரி, ஷோபா ஹாஜீரா சீமா ஆகியோரும் மனுக்களை வாபஸ் பெற்று போட்டியில் இருந்து விலகினர். இதையடுத்து மேயர் பதவிக்கு தேர்தல் நடந்தது. காங்கிரஸ் மேயர் வேட்பாளர் புஷ்பலதா ஜெகநாத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் கையை உயர்த்தும்படி மண்டல கமிஷனர் யஷ்வந்த் அறிவித்தார். இதையடுத்து அவருக்கு காங்கிரஸ்- ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ., மேல்-சபை உறுப்பினர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 48 பேரும் வாக்களித்தனர்.

பா.ஜனதா சார்பில் மேயர் பதவிக்கு போட்டியிட்ட சுனந்தபாலநேத்ராவுக்கு 24 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. இதனால் மேயராக காங்கிரசை சேர்ந்த புஷ்பலதா ஜெகநாத் தேர்வு செய்யப்பட்டதாக மண்டல கமிஷனர் யஷ்வந்த் அறிவித்தார். அதைதொடர்ந்து துணை மேயர் தேர்தல் நடந்தது. இதில் ஜனதாதளம் (எஸ்) சார்பில் போட்டியிட்ட சபி அகமது 48 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

இதைதொடர்ந்து புதிய மேயர் புஷ்பலதா ஜெகநாத், துணை மேயர் சபி அகமது ஆகியோருக்கு மண்டல கமிஷனர் யஷ்வந்த், மைசூரு மாநகராட்சி கமிஷனர் ஜெகதீஷ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் மேயர் பதவிக்கான அங்கிகளை வழங்கி, பொறுப்புகளை புஷ்பலதா ஜெகநாத்திடம் வழங்கினர்.

காங்கிரஸ்- ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். இந்த தேர்தலையொட்டி மைசூரு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story