தமிழகத்தில் புயல் பாதிப்பு: மத்திய அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்


தமிழகத்தில் புயல் பாதிப்பு: மத்திய அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Nov 2018 11:45 PM GMT (Updated: 17 Nov 2018 11:19 PM GMT)

கஜா புயலால் பாதித்த தமிழகத்திற்கு மத்திய அரசு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் கூறினார்.

மதுரை,

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மண்டலத்திற்கு உட்பட்ட மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் சந்திப்பு கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மதுரை மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். தேசிய பொதுச்செயலாளர் அப்துல் மஜீத், தேசிய துணை தலைவர் தெகலான் பாகவி, மாநில செயலாளர் அகமதுநவவி, மாநில செயற்குழு உறுப்பினர் ரபிக்அகமது, கல்பிகர்அலி ஆகியோர் முன்னிலை வகிகத்தனர். சிறப்பு விருந்தினராக கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஜி கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் மதுரை மண்டலத்திற்குட்பட்ட மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் தேசிய தலைவர் பைஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கஜா புயல் காரணமாக இறந்துபோன குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். கஜா புயல் பாதித்த தமிழகத்திற்கு மத்திய அரசு நிவாரண உதவிகளை உடனடியாக விரைந்து வழங்க வேண்டும். இறந்தவர் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகையை மேலும் உயர்த்தி தரவேண்டும். அரசியலமைப்பு சட்டம் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. வருகிற பாராளுமன்ற தேர்தலை காரணம் காட்டி மத்திய அரசு மக்களிடம் பிளவை ஏற்படுத்துகிறது. நாட்டு மக்கள் அனைவரும் பாபர் மசூதியின் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். அதில் ஜனநாயக ரீதியாக தீர்ப்பை கோர்ட்டு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story