சோரியாங்குப்பம் பகுதியில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு; மதுக்கடைகளை அகற்ற இளைஞர்கள் வலியுறுத்தியதால் பரபரப்பு
சோரியாங்குப்பம் பக்லுதியில் ஆய்வு செய்ய வந்த கவர்னரிடம், இளைஞர்கள் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகூர்.
புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ள சோரியாங்குப்பம் பகுதியில் விவசாயம் செய்துவரும் அரியாங்குப்பம்–மணவெளி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். தனது விவசாய நிலத்தில் பாசனத்திற்காக ஆழ்குழாய் அமைக்க புதுச்சேரி அரசு நிலத்தடி நீர் அதிகாரம் அமைப்பிடம் அனுமதி கேட்டு கடந்த 5 வருடத்திற்கு முன்பு விண்ணப்பித்து இருந்தாராம்.
பல்வேறு காரணங்களை கூறி அவருக்கு அனுமதி மருத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விவசாயத்திற்கு வெகுதூரத்தில் உள்ள பம்பு செட்டில் இருந்து தண்ணீர் கொண்டு விவசாயம் செய்கிறேன். இதனால் தனக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்படுவதாக கவர்னர் கிரண்பெடியிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி நேற்று வில்லியனூர், பாகூர் பகுதிகளில் ஆய்வு பணிக்கு சென்றார். பிற்பகலில் விவசாயின் புகாரை ஏற்று நேரடியாக சோரியாங்குப்பம் கிராமத்தில் சம்பவ இடத்திற்கு வந்தார். இதுகுறித்து நிலத்தடி நீர் அதிகாரம் அமைப்பு செயலர் பெத்தபெருமாள் மற்றும் பாகூர் தாசில்தார் கார்த்திகேயனிடம் விபரம் கேட்டு அறிந்தார். பிறகு நில பிரச்சினையை காரணம் காட்டி விவசாயத்திற்காக தண்ணீர் கிடைக்க போர்வெல் அமைக்க அனுமதி மறுக்க கூடாது. எனவே நிலத்தடி நீர் அதிகாரம் அமைப்பு உடனடியாக அனுமதி வழங்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சோரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கவர்னரை சந்தித்து, எங்கள் கிராமத்தில் அதிகமான மதுக்கடைகள் உள்ளதால் பெண்கள் உட்பட பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது.
மேலும் சாலை பாரமரிப்பு இல்லாமல் உள்ளது, விளையாட்டு மைதானம் மற்றும் அடிப்படை வசதிகள் சரிவர செய்து தர நடவடிக்கை எடுக்க வாட்ஸ் அப் மூலமாக புகார் தெரிவித்து இருந்தோம் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர். அப்போது அலுவலக வாட்ஸ்அப்புக்கு அனுப்பிய நகலுடன் அலுவலத்திற்கு வந்த புகார் செய்யுங்கள் என கூறினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.