குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் தளவாய்சுந்தரம் பங்கேற்பு


குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் தளவாய்சுந்தரம் பங்கேற்பு
x
தினத்தந்தி 18 Nov 2018 10:45 PM GMT (Updated: 18 Nov 2018 2:50 PM GMT)

குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பங்கேற்றார்.

நாகர்கோவில்,

குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் ராஜன் வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம், அவைத்தலைவர் சேவியர் மனோகரன், இணை செயலாளர் லதா ராமச்சந்திரன், துணை செயலாளர் பாக்கியலட்சுமி, பொருளாளர் திலக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் ஜஸ்டின் செல்வராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் தளவாய்சுந்தரம் பேசும்போது கூறியதாவது:–

குமரி மாவட்ட அ.தி.மு.க.வில் இனி சரிவு வரக்கூடாது. சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்துள்ளோம். ஆனால் இனி ஜெயலலிதாவின் ஆசியுடன் வெற்றி பெறுவோம். பூத் கமிட்டி அமைக்கும்போது அந்தந்த தெருக்களில் உள்ளவர்களே அதில் இடம் பெற வேண்டும். இதே போல நகராட்சிகளில் பூத் கமிட்டியில் வட்ட செயலாளர்கள் இடம்பெற வேண்டும். அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையை புதுப்பிக்காதவர்கள் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்துகொடுத்து புதுப்பித்தல் அவசியம்.

குமரி மாவட்டத்தில் ஒன்றியம், நகரம், ஊராட்சி மற்றும் பேரூராட்சி வாரியாக மாவட்ட செயலாளர்கள் சுற்றுப்பயணம் செய்வார்கள். அப்போது பூத் கமிட்டிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவப்படங்களுக்கு தளவாய்சுந்தரம் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

கூட்டத்தில், குமரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளிலும் பூத் வாரியாக 20 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்க வேண்டும், குமரி கிழக்கு மாவட்டத்துக்கு புதிய பொறுப்பாளர்களை நியமித்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நன்றி தெரிவிப்பது, சாத்தூர் இடைத்தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தளவாய்சுந்தரத்துக்கு உறுதுணையாக இருந்து, தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணகுமார், வீராச்சாமி, அணி செயலாளர்கள் ஜெயசீலன்,ஜெகதீஷ் சுகுமாரன், சுந்தரம், பொன் சுந்தர்நாத், திமிர்த்தியூஸ், சி.என்.ராஜதுரை, பூங்கா கண்ணன், வக்கீல் அணி இணை செயலாளர் லட்சுமிகாந்த், இலக்கிய அணி தலைவர் நாஞ்சில் சந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் பிரபு, நகர அவைத்தலைவர் விக்ரமன், சீனிவாசன், கோட்டார் கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் நகர செயலாளர் சந்துரு என்ற ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

Next Story