நேர்மையான மனிதர்களுக்கு அரசியல் களம் உதவாது இயக்குனர் பாரதிராஜா பேட்டி


நேர்மையான மனிதர்களுக்கு அரசியல் களம் உதவாது இயக்குனர் பாரதிராஜா பேட்டி
x
தினத்தந்தி 18 Nov 2018 10:30 PM GMT (Updated: 18 Nov 2018 5:26 PM GMT)

நேர்மையான மனிதர்களுக்கு அரசியல் களம் உதவாது என்று இயக்குனர் பாரதிராஜா கூறினார்.

ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வந்த இயக்குனர் பாரதிராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முதல் முறையாக போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சினிமாத்துறை சார்பில் உதவி மற்றும் பங்களிப்பு செய்ய சங்கங்கள் கூடி தான் ஏதாவது செய்ய வேண்டும்.

நான் நேர்மையானவன். உணர்ச்சிப்பூர்வமாக பேசுபவன். இதனால் எனக்கு அரசியலுக்கு வர தகுதி இல்லை. எனவே நான் நல்ல கலைஞனாக வாழ்ந்து பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். நான், நாம் தமிழர் கட்சி பொறுப்புகளில் இல்லை. சீமான் போக்கு என்னை கவர்ந்ததாலும், தமிழுக்கும், மண்ணுக்கும் இந்த சுடர் தேவை என்பதாலும் அவரை ஆசிர்வதித்து ஆதரிக்கிறேன். இன்றைய காலகட்டத்திற்கு சீமான் தமிழ் மக்களுக்கு மற்றும் தமிழுக்கு அவசியம் ஆனவர் என்று எனக்கு தோன்றியதால் சீமானை சிஷ்யனாக ஏற்று ஆதரிக்கிறேன்.

என்றைக்கு விருதுநகரில் காமராஜர் தோற்கடிக்கப்பட்டாரோ அன்றைக்கே நேர்மையான மனிதர்களுக்கு அரசியல் களம் உதவாது என்பதை அறிந்துகொண்டதால் அன்றே அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டேன். எனக்கு கட்சி ரீதியான ஈடுபாடு கிடையாது. கடந்த 50 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதாவுடன் மிகவும் நட்பாக இருந்தேன். மீ டூ விவகாரம் குறித்து எனக்கு தெரியாது. அதை பற்றி பேச வேண்டும் என்றால் மேடை போட்டு பல மணி நேரம் பேச வேண்டும்.

இவ்வாறு பாரதிராஜா கூறினார்.

பின்னர் நிருபர்கள் அவரிடம், கமல்ஹாசன், ரஜினிகாந்தை வைத்து மீண்டும் படம் எடுக்க வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த பாரதிராஜா, ‘‘எனக்கு வயதாகிவிட்டது. அவர்களுக்கும் வயதாகிவிட்டது. தனித்தனி கூடாரங்கள், தனித்தனி கொள்கைகள் உடன் துறை ரீதியாக அவர்கள் வளர்ந்து விட்டனர். மீண்டும் இணைந்தால் நல்லது’’ என்றார்.

சினிமா துறையினர் தொடர்ந்து அரசியலுக்கு வருவதன் காரணம் என்ன? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘ஓட்டு போட தகுதி உள்ள அனைத்து குடிமகன்களும் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர தகுதி உள்ளது’’ என்றார்.


Next Story