வெவ்வேறு சாலை விபத்துகளில்: மாணவி உள்பட 4 பேர் பலி


வெவ்வேறு சாலை விபத்துகளில்: மாணவி உள்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 19 Nov 2018 4:15 AM IST (Updated: 18 Nov 2018 11:19 PM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு சாலை விபத்துகளில் பிளஸ்-2 மாணவி உள்பட 4 பேர் பலியானார்கள்.

மத்திகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை மசூதி தெருவை சேர்ந்தவர் சுப்பராயன் இவரது மகன் தினேஷ் (வயது 19). ஓசூர் வாணியர் தெருவை சேர்ந்தவர் ஹேமந்த்குமார் (19). இவர்கள் இருவரும், ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

நேற்று மதியம், ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தளி ஜங்ஷன் மேம்பாலம் மீது, மொபட்டில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற ரோடுலோரும், இவர்கள் சென்ற மொபட்டும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த ஹேமந்த்குமார், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓசூர் மத்திகிரி சங்கமம் லே அவுட்டை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகள் பிரியதர்ஷினி (17). தனியார் பள்ளியில் பிளஸ் -2 படித்து வந்தார். விளையாட்டு வீராங்கனையான இவர் மாநில அளவில் பதக்கம் வென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை, மொபட்டில் மத்திகிரி கூட்டுரோடு அருகே பிரியதர்ஷினி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார், மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பிரியதர்ஷினி, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஓசூரை அடுத்த மிடுகிரிப்பள்ளியை சேர்ந்தவர் பிரவின் (28). டிரைவர். இவர் நேற்று மாலை, அச்செட்டிப்பள்ளி ஆஞ்சநேயர் கோவில் அருகே, மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரவின் இறந்தார். இந்த 2 விபத்துகள் குறித்தும், மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பர்கூர் அருகே உள்ள ஒரப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (70). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story