பாளையங்கோட்டை அருகே பயங்கரம் தலை துண்டித்து வாலிபர் படுகொலை தாமிரபரணி ஆற்றில் உடல் மீட்பு


பாளையங்கோட்டை அருகே பயங்கரம் தலை துண்டித்து வாலிபர் படுகொலை தாமிரபரணி ஆற்றில் உடல் மீட்பு
x
தினத்தந்தி 19 Nov 2018 5:00 AM IST (Updated: 19 Nov 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை அருகே தலை துண்டித்து வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். தாமிரபரணி ஆற்றில் இருந்து உடலை போலீசார் மீட்டனர்.

நெல்லை, 

பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரியை அடுத்த மேலப்பாலாமடையில் ஊரின் மையப்பகுதியில் உள்ள ஒரு கலையரங்கத்தின் மேடையில் நேற்று அதிகாலையில் ஒரு வாலிபரின் துண்டிக்கப்பட்ட தலை மட்டும் கிடந்தது. அதை சுற்றி ரத்தக்கறையும் படிந்திருந்தது. இதை அந்த பகுதி பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், தாழையூத்து துணை சூப்பிரண்டு பொன்னரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்கு தலை மட்டும் தனியாக கிடந்தது தெரியவந்தது. உடல் எங்கு கிடக்கிறது? என தெரியவில்லை. இதையடுத்து உடலை போலீசார் தேடினர்.

சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. அது அங்கிருந்து மோப்பம் பிடித்து கலையரங்கத்தை ஒருமுறை சுற்றியது. பின்னர் அங்குள்ள சந்து வழியாக ஓடி குளத்துக்கு சென்றது. எனவே குளத்துக்குள் வாலிபரின் உடல் கிடக்குமா? என்ற சந்தேகத்தில் தேடினார்கள். அங்கு ரத்தக்கறையுடன் ஒரு சாக்குப்பை மட்டும் கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். அதனை தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.

பின்னர் மோப்ப நாய் ரிக்கி அங்கிருந்து தாமிரபரணி ஆற்றங்கரைக்கு ஓடிச் சென்றது. இதையடுத்து போலீசாருடன், தீயணைப்பு துறையினரும் இணைந்து தண்ணீருக்குள் வாலிபரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஓரிடத்தில் தண்ணீருக்குள் உடல் மூழ்கி கிடந்தது. தீயணைப்பு படை வீரர்கள் உடலை மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அந்த உடலையும், தலையையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், பாளையங்கோட்டை அருகே உள்ள வீரமாணிக்கபுரம் தொம்மைமிக்கேல்புரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் பால்துரை (வயது 19), கட்டிட தொழிலாளி என்பது தெரியவந்தது.

மேலும் நடத்திய விசாரணையில், பால்துரையின் தந்தை மாரிமுத்துவுக்கும், தாயார் சுசீலாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சுசீலா கணவரை பிரிந்து சொந்த ஊரான ராஜவல்லிபுரத்தில் தனியாக வசித்து வருகிறார். இதனால் பால்துரை, தாய் சுசீலாவை பார்க்க அடிக்கடி ராஜவல்லிபுரத்திற்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் சுசீலாவின் உறவினருக்கு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை பார்க்க நேற்று முன்தினம் சுசீலாவும், பால்துரையும் சென்று இருந்தனர். பின்னர் மாலையில் இருவரும் நெல்லையில் இருந்து ராஜவல்லிபுரத்துக்கு பஸ்சில் வந்தனர். ராஜவல்லிபுரத்தில் சுசீலாவும், பால்துரையும் இறங்கினார்கள். ஆனால் பால்துரை தாயுடன் வீட்டுக்கு செல்லாமல் வெளியே சென்றுவிட்டார். இரவில் வெகுநேரமாகியும் பால்துரை வீட்டுக்கு வராததால் சுசீலா தனது மகனை தேடியுள்ளார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் பால்துரையை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தலையை மட்டும் பாலாமடை கலையரங்கத்தில் வைத்துவிட்டு, தாமிரபரணி ஆற்றில் உடலை வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

பால்துரை எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் உத்தரவின் பேரில் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, நெல்லையை சேர்ந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மோட்டார்சைக்கிள் வாங்கியது தொடர்பாக பால்துரைக்கும், நெல்லையை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்த பிரச்சினையால் கொலை செய்யப்பட்டாரா? என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், பால்துரை தனது பாட்டியை கொலை செய்ததாக மேலப்பாளையம் போலீசில் வழக்கு இருப்பதும் தெரியவந்தது. பால்துரை சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊரை சுற்றி வந்துள்ளார். இதை அவருடைய பாட்டி நல்லாட்சியம்மாள் கண்டித்துள்ளார். மேலும் மதுகுடிக்க பணம் கேட்டதற்கு கொடுக்க மறுத்த பாட்டி நல்லாட்சியம்மாளை, பால்துரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்துரையை கைது செய்தனர். அப்போது பால்துரைக்கு 18 வயது பூர்த்தி அடையாததால் அவரை சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பால்துரை, குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் அந்த பகுதியில் சுற்றித்திரிந்து வந்ததும் தெரியவந்தது.

பால்துரையின் உடலை பார்த்து அவரது தாய் சுசீலா கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. தலை துண்டித்து வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story