கார் மோதியதில் முன்னாள் ஊராட்சி துணைத்தலைவி பலி உறவினர்கள் சாலை மறியல்


கார் மோதியதில் முன்னாள் ஊராட்சி துணைத்தலைவி பலி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Nov 2018 3:45 AM IST (Updated: 19 Nov 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே கார் மோதிய விபத்தில் முன்னாள் ஊராட்சி துணை தலைவி பலியானார். இதை கண்டித்தும், அவரது குடும்பத்துக்கு இழப்பீடு கோரியும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விளாத்திகுளம், 

விளாத்திகுளம் அருகே உள்ள இ.வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் வெள்ளத்துரை. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி (வயது 44). முன்னாள் ஊராட்சி துணை தலைவி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

செல்வி நேற்று மதியம் 3 மணிக்கு இ.வேலாயுதபுரத்தில் உள்ள தோட்டத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டு சாலையோரம் நடந்து வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தாராம். அப்போது கன்னியாகுமரியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி ஒரு கார் சென்றது. அந்த கார் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்

இதனை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அந்த இடத்தில் திரண்டனர். அவர்கள் அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும், இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மலிங்கம், விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், குளத்தூர் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

அதன் பின்னர் விபத்தில் இறந்த செல்வியின் உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான ராமநாதபுரம் ஆற்றங்கரை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த உதுமான் அலி என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story