வால்பாறையில் ஆபத்தை உணராமல் ஆறுகளில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்; வனத்துறையினர் எச்சரிக்கை


வால்பாறையில் ஆபத்தை உணராமல் ஆறுகளில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்; வனத்துறையினர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 Nov 2018 4:45 AM IST (Updated: 19 Nov 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் ஆபத்தை உணராமல் ஆறுகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கிறார்கள். இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை,

வால்பாறை பகுதியில் பனிக்காலம் தொடங்கி விட்டதால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கி உள்ளனர். அவர்கள் வால்பாறை பகுதியில் அங்காங்கே ஓடும் ஆறுகளை பார்த்ததும் உடனே இறங்கி குளிக்க சென்றுவிடுகின்றனர். வால்பாறை பகுதியை பொறுத்த வரை அதிகப்படியான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வது கூழாங்கல் ஆறுதான்.

இந்த கூழாங்கல் ஆறு வால்பாறையில் இருந்து சிறுகுன்றா எஸ்டேட் பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ளது. இந்த ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு அனுமதியும் உண்டு. ஆற்று பகுதியானது முழுவதும் எங்கிருந்து பார்த்தாலும் தெரியக்கூடிய இடம். மேலும் இந்த பகுதியில் அதிகளவில் மக்கள் நடமாட்டம் இருக்கும். இதனால் யார் ஆற்றில் இறங்கி குளித்தாலும் நன்றாக அங்குள்ளவர்கள் பார்க்க முடியும்.

எனவே வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் மீட்பு பணியை உடனே செய்ய முடியும். வால்பாறை பகுதியில் அதிகளவில் ஆறுகள் நிறைந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக சுற்றுலா வரும் பயணிகள் ஆறுகளில் இறங்கி குளித்து மகிழ்கிறார்கள்.

வால்பாறையில் இருந்து சோலையார் எஸ்டேட் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள சுங்கம் ஆற்றில் குளிக்கவும் அனுமதி உண்டு. தற்போது வால்பாறை பகுதிக்கு இருசக்கர வாகனங்களில் சுற்றுலா வரும் இளைஞர்கள் வனப்பகுதிக்குள் சென்று அங்குள்ள ஆறுகளில் குளிக்கிறார்கள். இளைஞர்கள் மது அருந்திவிட்டு குளிப்பதற்காக தனிமையான இடங்களை தேடிச்செல்கிறார்கள். சுங்கம் ஆறு சாலையில் செல்வோருக்கு தெரிவது இல்லை. இதனால் ஆறுகளில் குளிக்கும் போது தவறி விழுந்து விட்டதால் கூட காப்பாற்ற செல்வதில் சிரமம் உள்ளது.

சோலையார் சுங்கம் ஆற்றில் எஸ்டேட் பகுதியையும், வனப்பகுதியையும் ஓட்டிய மறைவான இடங்களுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் குளிக்கின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆறுகளில் உள்ள சுழல்கள் இருப்பது தெரியாது. இதனால் ஆற்றில் இறங்கி குளிக்கும் போது ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்.

மேலும் இதுபோன்ற வனப்பகுதிகளை ஒட்டியுள்ள ஆற்று பகுதிகளுக்கு வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்கு வரும். இதனால் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும். எனவே வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறிப்பாக இளைஞர்கள் பாதுகாப்பற்ற மறைவான இடங்களில் உள்ள ஆற்றில் குளிக்கவேண்டாம். அனுமதிக்கப்பட்ட ஆற்று பகுதிகளில் குளிக்க வேண்டும். இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபட்டு யாரும் ஆபத்தில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் வனத்துறையினரும், போலீசாரும் எச்சரித்து உள்ளனர்.


Next Story