கொளப்பள்ளியில் புதுப்பொலிவு பெற்ற அங்கன்வாடி மையம்


கொளப்பள்ளியில் புதுப்பொலிவு பெற்ற அங்கன்வாடி மையம்
x
தினத்தந்தி 19 Nov 2018 3:45 AM IST (Updated: 19 Nov 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

கொளப்பள்ளியில் அங்கன்வாடி மையம் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அங்கன்வாடி மையத்தில் கொளப்பள்ளி, ரூபிமைன்ஸ், பாடசாலை வீதி உள்பட பல பகுதிகளை சேர்ந்த தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. மேற்கூரை விரிசல் ஏற்பட்டு மழைக்காலத்தில் தண்ணீர் உள்ளே வழிந்தோடியது.

இதனால் குழந்தைகள் அவதி அடைந்து வந்தனர். மேலும் அங்கன்வாடி மைய கட்டிடத்தில் உள்ள ஜன்னல், கதவுகள் சேதம் அடைந்து இருந்தது. இதனால் கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் அதுகுறித்து ‘தினத்தந்தி‘ நாளிதழில் படத்துடன் செய்தியும் வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிவேல், பொறியாளர் கிருஷ்ணபிரசாத் உள்ளிட்ட அலுவலர்கள் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு நடத்தினர். பின்னர் கூடலூர் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் செலவில் அங்கன்வாடி மைய கட்டிடம் சீரமைக்கப்பட்டது.

மேலும் புதிய மேற்கூரைகள் மற்றும் கட்டிடத்துக்கு வர்ணம் பூசப்பட்டு குழந்தைகள் கண்டு ரசிக்கும் வகையில் படங்கள் வரையப்பட்டன. இதனால் அங்கன்வாடி மைய கட்டிடம் புதுப்பொலிவு பெற்று உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு குழந்தைகளின் பெற்றோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Next Story