கையுன்னி சாலையில் ஆபத்தான மின்கம்பம் வாகன ஓட்டிகள் பீதி
கையுன்னி சாலையில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் இருப்பதால், வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா சேரம்பாடியில் இருந்து சுல்தான்பத்தேரி செல்லும் சாலையில் கையுன்னி பஜார் உள்ளது. இங்கு அரசு பள்ளிக்கூடங்கள், கிராம நிர்வாக அலுவலகம், வணிக நிறுவனங்கள் உள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளிக்கூட மாணவ– மாணவிகள் அதிகளவு வந்து செல்லும் இடமாக விளங்குகிறது. இப்பஜாரில் இருந்து அய்யங்கொல்லிக்கு இணைப்பு சாலையும் செல்கிறது.
கூடலூரில் இருந்து பந்தலூர், சேரம்பாடி மற்றும் கையுன்னி, எருமாடு வழியாக சுல்தான்பத்தேரிக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோல் கேரளாவில் இருந்து சேரம்பாடி, கூடலூர் பகுதிக்கு அம்மாநில பஸ்கள் இயக்கப்படுகிறது. தமிழக– கேரளாவை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் தனியார் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் அதிகளவு இயக்கப்படுகிறது.
இதனால் கையுன்னி பஜார் பகுதிக்கு வரும் பொதுமக்கள், மாணவ– மாணவிகள் பயன்படுத்துவதற்காக அப்பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இதன் அருகே சாலையை ஒட்டி ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று நிற்கிறது. எந்த நேரத்திலும் மின்கம்பம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் நிழற்குடையில் நிற்கும் பயணிகள் மற்றும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பீதி அடையும் நிலை காணப்படுகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என பலமுறை சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனியாவது அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பத்தை சாலையோரம் நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.