நெல்லை மாநகராட்சி பகுதியில் சுற்றி திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது குற்ற நடவடிக்கை மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
நெல்லை மாநகராட்சி பகுதியில் சுற்றி திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர் எச்சரித்துள்ளார்.
நெல்லை,
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நெல்லை மாநகராட்சி பகுதியில் கால்நடை வளர்ப்பவர்கள் அவற்றை முறையாக வீடுகளில் கட்டி வைத்து வளர்ப்பது இல்லை. காலையில் கால் நடைகளில் பால் கறந்த பிறகு அவற்றை வெளியே மேய்ச்சலுக்காக உரிமையாளர்கள் விட்டு விடுகிறார்கள்.
பின்னர் அதைப்பற்றி கவலைப்படுவதே இல்லை. கால்நடைகளை சாலைகளிலும், பஸ் நிலையங்களிலும் சுற்றி திரிய விடுகிறார்கள். இதனால் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துக்களும் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் மிகுந்த சிரமத்துடன் வாகனங்கள் ஓட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
கடந்த காலங்களில் சாலையில் திரியும் கால் நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. விதிமுறை பின்பற்றாத உரிமையாளர்களின் கால்நடைகள் கோசாலைகளில் ஒப்படைக்கப்பட்டது. அப்படியிருந்தும் சில உரிமையாளர்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் கால்நடைகளை சாலையில் சுற்றி திரிய விடுகிறார்கள்.
கால்நடைகளால் ஏற்படும் சிரமங்கள் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது. இவற்றை கருத்தில் கொண்டு போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து தொடர் நடவடிக்கை மற்றும் நிரந்தர நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை தடுக்க அதன் உரிமையாளர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் திட்டத்தின் கீழ் போக்குவரத்து போலீசார் குற்றநடவடிக்கை மேற்கொள்ளவும், மாநகராட்சி அலுவலர்களை கொண்டு கண்காணிப்பு குழுக்கள் அமைத்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநகர நல அலுவலர் சத்தீஷ், மக்கள் தொடர்பு துறை துணை இயக்குனர் அண்ணா, நகர போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தாமரை கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டி, துர்கை சாமி, மாநகராட்சி சுகதார ஆய்வாளர் அரசகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story