கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கலாம் - கலெக்டர் கதிரவன் வேண்டுகோள்


கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கலாம் - கலெக்டர் கதிரவன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 19 Nov 2018 3:30 AM IST (Updated: 19 Nov 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கலாம் என்று கலெக்டர் கதிரவன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஈரோடு,

கஜா புயல் தாக்குதல் காரணமாக நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களும் நிவாரண பொருட்கள் வழங்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கேட்டுக்கொண்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

கஜா புயலினால் பாதிக்கப்பட்டு உள்ள பொதுமக்களுக்கு உதவிடும் வகையிலும், அவர்களது இயல்பு வாழ்க்கையை மீட்டெடுத்திடும் வகையிலும் ஈரோடு மாவட்ட வணிகர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நிவாரண பொருட்களை வழங்கலாம். இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான போர்வைகள், லுங்கிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள், உணவு தயாரிக்க தேவையான பொருட்கள், பால், பிஸ்கட், மருந்து பொருட்கள், தண்ணீர் பாட்டில், மிதியடி, கொசுவர்த்தி சுருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் வழங்கலாம்.

இந்த நிவாரண பொருட்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சேகரிக்கப்படுகிறது. நிவாரண பொருட்களை கொண்டு செல்ல வாகன உதவியும் தேவைப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரை (பொது) தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.


Next Story