3 நாட்களாகியும் மீள முடியாத துயரத்தில் பொதுமக்கள் புதுக்கோட்டை அழகு நகரத்தை சிதைத்த ‘கஜா’ புயல்


3 நாட்களாகியும் மீள முடியாத துயரத்தில் பொதுமக்கள் புதுக்கோட்டை அழகு நகரத்தை சிதைத்த ‘கஜா’ புயல்
x
தினத்தந்தி 18 Nov 2018 11:00 PM GMT (Updated: 18 Nov 2018 7:41 PM GMT)

புதுக்கோட்டை அழகு நகரத்தை ‘கஜா‘ புயல் சிதைத்து விட்டது. 3 நாட்களாகியும் மீள முடியாத துயரத்தில் பொது மக்கள் உள்ளனர்.

புதுக்கோட்டை,

வங்கக்கடலில் மையம் கொண்ட ‘கஜா’ புயல் தீவிரம் கொண்டு நகர்ந்தவாறே கடந்த 16-ந் தேதி அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்தது. அந்த புயல் புதுக்கோட்டை மாவட்டத்தையும் விட்டு வைக்காமல் புரட்டி போட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தும், உடைந்தும் விழுந்தன.

இதனால், கடந்த 3 நாட்களாக நகரப்பகுதி மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் மின்சாரம், குடிநீர் இன்றி பொது மக்கள் தவித்து வருகிறார்கள். குடிநீர் வினியோகம் என்பது அறவே இல்லாமல் போனது. காசு கொடுத்து அவற்றை வாங்கினாலும் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு கேன் தண்ணீர் ரூ.200-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் டேங்கர் லாரிகளில் வினியோகிக்கப்படும் குடிநீரை பெற முண்டியடித்துக் கொண்டு காலிக்குடங்களுடன் நீண்ட வரிசையில் நின்றனர்.

மேலும் அத்தியாவசிய பொருட்களும் தாறுமாறாக விலை உயர்ந்து விட்டது.

புயல் நிவாரணக்குழுவுடன் இணைந்து மாவட்ட நிர்வாகமும் முனைப்புடன் அங்கு மீட்புப்பணிகள் மற்றும் சேதமான மின்கம்பங்களை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டாலும் இயல்பு வாழ்க்கை திரும்ப இன்னும் 5 நாட்கள்வரை ஆகலாம் என கூறப்படுகிறது.

அறந்தாங்கி, ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம், பொன்னமராவதி, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, அரிமளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேரோடு சாய்ந்து கிடக்கும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் பொதுமக்களே ஈடுபட்டு வருகிறார்கள். சில இடங்களில் தீயணைப்பு வீரர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி வருகிறார்கள்.

இருப்பினும் இன்னும் பல இடங்களில் மரங்கள் அப்புறப்படுத்தப்படாமல் அப்படியே கிடக்கிறது. இதனால், கிராமப்புறங்களில் பல இடங்களில் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்றுவரக்கூடிய அளவில் வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது பெரிய மரத்துண்டுகளை வெட்டமுடியாமல் சிறு கிளைகளை மட்டும் வெட்டி பொதுமக்களே வழி ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

கஜா புயல் சீற்றத்தால் மா, பலா, தென்னை மரங்கள் ஏராளமாக சாய்ந்துள்ளன. மேலும் சாகுபடி செய்யப்பட்டிருந்த காய்கறி பயிர்கள் நாசமானது.

அரிமளம் பகுதியில் கரும்பு, நெல், வாழை உள்ளிட்டவை பல ஏக்கர் கணக்கில் சேதமடைந்துள்ளன. விவசாயிகளின் விளைபொருட்களும் சேதமடைந்து இருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. ஒரு லிட்டர் பால் ரூ.40-க்கு பதிலாக ரூ.60 முதல் ரூ.80 வரை பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக புதுக்கோட்டை அழகு நகரத்தை கஜா புயல் சிதைத்து சூறையாடி விட்டது என்றே சொல்லலாம். ஓங்கி வளர்ந்த மரங்கள், சாலையோரம் உள்ள நிழற்குடைகள், மின் கம்பங்கள் என அனைத்தும் புயலுக்கு நாசமாகி விட்டன.

எழில் கொஞ்சும் நகரமான புதுக்கோட்டை இன்று மயான பூமிபோல களையிழந்து காணப்படுவது பொதுமக்களை வேதனையடைய செய்துள்ளது. குறிப்பிட்ட இடங்களுக்கு ஜெனரேட்டர் மூலம் குடிநீர் தொட்டிக்கான மின்மோட்டார்களை இயக்கி குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் ஜெனரேட்டர் வைத்திருப்பவர்கள் அதை வாடகைக்கு விட்டு வருகிறார்கள். மணிக்கு ரூ.900 முதல் ரூ.1000 வரை வாடகை கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.புயல் தாக்கி 3 நாட்களாகியும் மீள முடியாத துயரத்தில் புதுக்கோட்டை மக்கள் உள்ளனர்.

Next Story