தாராபுரம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு பிரசவம் அழகான ஆண் குழந்தை பிறந்தது


தாராபுரம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு பிரசவம் அழகான ஆண் குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 19 Nov 2018 4:15 AM IST (Updated: 19 Nov 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

தாராபுரம்,

பீகார் மாநிலம் ரகுநாத்பூரை சேர்ந்தவர் ஆலமியான். இவருடைய மனைவி ரபீனா (வயது 30). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ரபீனா மீண்டும் கர்ப்பமானார். இதற்கிடையில் சொந்த ஊரான ரகுநாத்பூரில் ஆலமியானுக்கு வேலை ஏதும் கிடைக்கவில்லை. மேலும் இவருடைய உறவினர்கள் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். எனவே வேலை ஏதாவது இருந்தால் கூறுங்கள் என்று ஆலமியான் அவர்களிடம் கூறியிருந்தார். அதன்படி திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஒரு தனியார் கோழிப்பண்ணையில், குடும்பத்துடன் தங்கி வேலை செய்ய ஆட்கள் தேவை என்று உறவினர்கள் மூலம் ஆலமியானுக்கு தகவல் கிடைத்துள்ளது.

வேலையில்லாமல் இருந்து வந்த ஆலமியான், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியையும் மற்றும் குழந்தைகளையும் அழைத்து கொண்டு, ரகுநாத்பூரில் இருந்து காங்கேயம் வந்துள்ளார். அங்கு ஏற்கெனவே தங்கி வேலை செய்து கொண்டிருந்த அவருடைய உறவினர்களை சந்தித்துவிட்டு, பின்னர் மீண்டும் அங்கிருந்து மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு, நேற்று காலை பழனிக்கு தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

பஸ் தாராபுரம் அருகே குள்ளாய்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ரபீனாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலி தாங்கமுடியாத ரபீனா பஸ்சுக்குள் கதறினார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் ரபீனாவிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். ஓட்டுனரிடம் சென்று பஸ்சை சாலை ஓரமாக நிறுத்தச் சொல்லி கேட்டுக் கொண்டனர். அதன்படி பஸ் சாலையோரமாக நின்றதும், பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கிக் கொண்டனர்.

ஒரு சில பெண் மட்டும் பஸ்சுக்குள் சென்று ரபீனாவிற்கு உதவினார்கள். அப்போது பஸ்சுக்குள் ரபீனாவுக்கு சுக பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனால் பயணிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பிறகு பயணிகளின் ஒத்துழைப்போடு, அதே பஸ்சில் ரபீனாவையும், குழந்தையையும் அழைத்து சென்று தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.

அங்கு ரபீனாவிற்கும், குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு ரபீனாவும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பஸ்சில் பயணம் செய்த கர்ப்பிணிக்கு, குழந்தை பிறந்த தகவல் அந்த பகுதியில் பரவியது. இதையடுத்து குழந்தையையும் தாயையும், பார்க்க ஏராளமான பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். பயத்தின் காரணமாக குழந்தை பிறக்க ஒரு மாதத்திற்கு முன்பே ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில், நிறைமாத கர்ப்பிணி ஒருவர், பஸ்சில் பயணம் செய்தபோது குழந்தை பெற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story