கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மருத்துவம், மீட்பு பணிக்குழு; கலெக்டர் வழியனுப்பி வைத்தார்
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக மருத்துவம் மற்றும் மீட்புப் பணிக்குழுவினரை கலெக்டர் வழியனுப்பி வைத்தார்.
ராமநாதபுரம்,
கஜா புயலால் நாகபட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இவ்வாறு புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்ட மக்களுக்கு உதவிக் கரம் நீட்டும் விதமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுவதற்கான நவீன எந்திரங்களுடன் பணியாளர்கள் குழுக்களை கலெக்டர் வீரராகவ ராவ் வழியனுப்பி வைத்தார்.
குறிப்பாக, நாகபட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு தலா 20 நவீன மர அறுவை எந்திரங்களுடன் 40 பணியாளர்களை கொண்ட 2 குழுக்கள் தனித்தனியே 2 சிறப்பு வாகனங்களில் சென்றனர். இந்த மீட்பு குழுக்களில் தீயணைப்புத்துறை, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகளை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளனர்.
அதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய் பரவாமல் தடுப்பதற்கான சுகாதாரம் மற்றும் மருத்துவ பணிகளை மேற்கொள்வதற்காக ராமநாதபுரம் சுகாதார கோட்டத்தில் இருந்து 4 குழுக்களும், பரமக்குடி சுகாதார கோட்டத்தில் இருந்து 2 குழுக்களும் சென்றன. ஒவ்வொரு குழுவிலும் தலா 2 மருத்துவ அலுவலர்கள், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு சுகாதார பணியாளர் இடம்பெற்று உள்ளனர். இந்த குழுவினர் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, திட்ட இயக்குனர் ஹெட்சி லீமா அமாலினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கண்ணபிரான், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட தீயணைப்பு அலுவலர் சாமிராஜ் உள்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.