மேலூர் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் சேதம்; விவசாயிகள் வேதனை
மேலூர் பகுதியில் கஜா புயல் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மேலூர்,
பெரியாறு, வைகை அணைகளின் நீர் பாசனத்தின் ஒரு போக கடைசி பகுதி மேலூர் தாலுகா ஆகும். இங்கு படிந்துள்ள வண்டல் மண் உரத்தால் கரும்பு மற்றும் வாழை பயிர்கள் விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது. இதனால் மேலூர் பகுதியில் விவசாயிகள் பொங்கல் கரும்புகளை அதிகம் பயிரிட்டு வருகின்றனர். மேலும் குஜராத், மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சங்கரஹாந்தி(பொங்கல்) விழாவிற்கு மேலூர் பகுதியில் இருந்து ஆண்டுதோறும் அதிக அளவில் கரும்புகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு ஏற்றுமதிக்காக பயிரிடப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொங்கல் கரும்புகள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சமீபத்தில் வீசிய கஜா புயலால் ஒட்டுமொத்தமாக ஒடிந்து சாய்ந்து சேதமடைந்துவிட்டன.
எட்டிமங்கலம், புதுசுக்காம்பட்டி, பழையசுக்காம்பட்டி, சூரக்குண்டு, கல்லம்பட்டி, அ.வல்லாளபட்டி, சருகுவலையபட்டி, வடக்குவலையபட்டி, நாவினிப்பட்டி, கூத்தப்பன்பட்டி, கீழையூர், தனியாமங்கலம், கோட்டநத்தம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக உள்ள கரும்புகள் சாய்ந்து முழுமையாக சேதமடைந்தன. இதேபோன்று மேலூர் பகுதியில் வாழைகளும் சாய்ந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.
விவசாயிகள் கூறும்போது, அதிக வட்டிக்கு கடன் வாங்கி கரும்பு, நெற்பயிர்களை சாகுபடி செய்தோம். ஆனால் கஜா புயலால் கரும்பு, வாழை மற்றும் நெல் உள்ளிட்ட பயிர்கள் ஒட்டுமொத்தமாக சேதமடைந்துள்ளன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உடனடியாக முழு நிவாரணம் வழங்குவதுடன், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கண்ணீர்மல்க தெரிவித்தனர்.