இழப்பீடு வழங்குவதில் தமிழக அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு தரும் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
இழப்பீடு வழங்குவதில் தமிழக அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு தரும் என மதுரை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளை பார்வையிட நாளை(இன்று) செல்கிறேன். அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. புயலால் வாழை, தென்னை ஆகியவை சாய்ந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை அதிகாரிகள் சந்திக்கும் போது சிலர் கோபப்படுவார்கள். இதை அதிகாரிகள்தான் பொறுத்துக்கொள்ள வேண்டும். அமைச்சர்கள் அனைவரும் களத்தில் இறங்கியுள்ளனர். முதல்–அமைச்சரும் உதவிகள் செய்வதாக கூறியுள்ளார். இழப்பீடு வழங்குவதில் மாநில அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். எந்தந்த நேரங்களில் எந்தந்த உதவிகள் செய்ய வேண்டுமோ அனைத்தையும் அரசாங்கம் அந்தந்த நேரங்களில் செய்துள்ளது. இது பாராட்டுக்குரியது. மீட்பு நடவடிக்கையை விட்டு அரசை குறை சொல்லக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.