பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நிதித்துறை செயலாளரின் சுற்றறிக்கை செல்லாது - நாராயணசாமி
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நிதித்துறை செயலாளரின் சுற்றறிக்கை செல்லாது என்றும் கடந்த கால நடைமுறைகள் தொடரவும் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி,
முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை செயலாளர் மற்றும் அரசுத்துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள், அனைத்து துறை தலைவர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி அரசின் நிதித்துறை செயலாளர் கடந்த 3-8-2018 அன்று நிதி அமைச்சர் மற்றும் முதல்-அமைச்சரின் ஒப்புதலின்றி செலவின மேலாண்மை குறித்து ஒரு சுற்றறிக்கையை அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் 2014-ம் ஆண்டின் அரசு ஆணை 47-ல் நிதி தொடர்பான பகிர்ந்தளிப்பு விதி 13-ன்படி தற்காலிக செலவினம் மற்றும் இதர செலவுகளுக்கு மட்டுமே நிதி ஒப்புதல் பகிர்ந்தளிப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையில் மேற்கூறிய 2-க்கு மட்டுமே நிதி பகிர்ந்தளிப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற வார்த்தைகள் சரியானதல்ல. ஆனால் 2014-ம் ஆண்டு நிதி பகிர்ந்தளிப்பு ஒப்புதல் வழங்கிய ஆணையில் கவர்னரின் அதிகாரம், செயலாளர், துறைத்தலைவர், அலுவலக தலைவர் ஆகிய அனைவருக்கும் திட்டம் மற்றும் திட்டமில்லா செலவுகள் அடங்கிய, பட்ஜெட்டில் ஒப்புதல் பெறப்பட்ட திட்ட செலவு, வேலைகளுக்கான செலவு, கடன் வழங்குதல், கடனுக்கான முன்பணம் வழங்குதல் ஆகிய செலவின அதிகாரங்கள் அனைத்தும் கவர்னரின் ஒப்புதலோடு 2014-ம் ஆண்டிலேயே மேற்கூறிய ஆணைகளின் இணைப்புகளில் நிதி பகிர்ந்தளிப்பு அதிகாரம் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கும், வேலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே 3-8-2018 தேதியிட்ட நிதிச்செயலாளரின் சுற்றறிக்கையின் 2-வது பத்தி 2014-ம் ஆண்டு வழங்கிய நிதி பகிர்ந்தளிப்பு ஆணைக்கு எதிரானதாகும். திட்டங்களுக்கும், வேலைகளுக்கும் முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகள், செயலாளர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மறைத்து தற்காலிக மற்றும் இதர செலவுகளுக்கு மட்டுமே 2014-ம் ஆண்டு ஆணை சொல்கிறது என்று கூறிய அந்த சுற்றறிக்கை சரியானதல்ல. கெட்ட நோக்கமுடையதாகும். மற்றும் சட்ட விரோதமானதாகும். மேலும் இந்த சுற்றறிக்கை மாநில நிதி அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் அனுப்பப்பட்டதாகும்.
மத்திய அரசின் அனைத்து வகையான மானிய கொடைகளும், அதாவது மானியதொகை கல்வி உதவித்தொகை, போன்ற அனைத்தும் திட்டங்களின் அடிப்படையிலேயே செலவின ஒப்புதல் விதி 18-ன்படி வழங்கப்படுகிறது. மத்திய நிதி அமைச்சகம், மத்திய அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றம் நிறைவேற்றிய திட்டங்களுக்கான செலவின ஒப்புதல் வழங்கப்படுகிறது. அதுபோலவே பொதுத்துறை நிறுவனங்களுக்கான மூலதன நிதியும் விதி 19 மற்றும் 18-ன்படி திட்ட செலவாக வழங்கப்படுகிறது. மத்திய அரசு அதிகாரிகள் யாருக்கும் மானியக்கொடை அதிகாரம் வழங்குவதற்கென்று தனி அதிகாரம், அரசு நிறுவனங்களின் மூலதன செலவு வழங்குவதற்கு என்று தனி அதிகாரம் எந்த ஒரு மத்திய அமைச்சகத்திற்கும் தனியாக வழங்கப்படவில்லை.
மத்திய அரசின் நிதி விதிகளை அப்படியே நடைமுறைப்படுத்தும் புதுச்சேரி அரசும் விதி 20 மற்றும் 19-ல் சொல்லப்பட்ட மானிய செலவினங்களுக்கான ஒப்புதலை புதுச்சேரி மாநில திட்டக்குழுவின் தலைவரான கவர்னரும், புதுச்சேரி அமைச்சரவை, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றம் ஆகிய அனைவரின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே விதி 19 மற்றும் 20-ன்படி செலவின ஒப்புதல்கள் இதுநாள் வரை வழங்கப்பட்டு வந்தது. இன்றளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற இந்த திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஆகிய அனைவரின் ஒப்புதல் பெறப்பட்ட பட்ஜெட் செலவினத்தை, புதுச்சேரியில் உள்ள எந்த ஒரு அதிகாரம் படைத்த தனிநபருக்கும் மாற்றம் செய்வதற்கு அதிகாரம் இல்லை.
திட்டங்கள் மற்றும் வேலைகளுக்கான நிதி செலவின ஒப்புதல் மானிய கொடையாக நிதித்துறையால் மட்டுமே முதல்-அமைச்சரின் அதிகாரத்திற்கு ஏற்றவாறு பல ஆண்டுகளாக மானியக்கொடை ஒப்புதல் அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இவ்வாறு ஒப்புதல் வழங்கப்பட்டு வந்ததை மத்திய உள்துறை அமைச்சகமும் புதுச்சேரி அரசின் தலைமை செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் சரி என்று கூறியுள்ளது. நிதித்துறையின் 3-8-2018 தேதியிட்ட சுற்றறிக்கை அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாகும். மேலும் இது நிதித்துறையை கவனித்து வருகின்ற முதல்-அமைச்சரின் ஒப்புதலையும் பெறவில்லை.
எனவே நிதித்துறையை கவனிக்கும் முதல்-அமைச்சராகிய நான் 3-8-2018 தேதியிட்ட சுற்றறிக்கையின் 2-வது பத்தி சட்ட விரோதமானது என்றும் 1978-ம் ஆண்டு நிதி பகிர்ந்தளிப்பு விதிகளுக்கும் 2014-ம் ஆண்டின் அரசு ஆணை 47-ல் வழங்கப்பட்டுள்ள நிதி பகிர்ந்தளிப்பு அதிகார ஆணைக்கும் முரண்பட்டது என்பதாலும், மேல் சொன்ன சுற்றறிக்கையின் 2-வது பத்தி செல்லத்தக்கதல்ல என்று ஆணையிடுகிறேன். அனைத்து துறைகளும் மற்றும் அனைத்து அலுவலகங்களும் அவர்களுக்கான மானியக்கொடை பெறுவதற்கு எந்த நடைமுறைகளை சுற்றறிக்கை தேதியான 3-8-2018க்கு முன்பு பின்பற்றினார்களோ அதே நடைமுறையை அரசு நிறுவனங்களின் நலன்கருதி தொடர வேண்டும் என்று ஆணையிடுகிறேன்.
2014-ம் ஆண்டின் அரசு ஆணை 47-ன் இணைப்பில் சொல்லப்பட்டுள்ள மானியம் மற்றும் மூலதனங்களுக்கான செலவின ஒப்புதல் விதி 18-ன்படி திட்டம் மற்றும் வேலைகளின் அடிப்படையிலேயே கடந்த 50 ஆண்டுகளாக தொடரப்பட்ட செலவின ஒப்புதல் வழங்கப்பட்ட நிலை தொடரவேண்டும். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் முதல்-அமைச்சர் தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர் மற்றும் அனைத்து செயலாளர்கள், அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் புதுச்சேரியில் உள்ள அனைத்து பொதுத்துறை ஊழியர்களும், நிறுவனங்களும் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அந்த உத்தரவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story