தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் கிராம மக்களின் மறியல் போராட்டத்தால் போக்குவரத்து முடங்கியது


தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் கிராம மக்களின் மறியல் போராட்டத்தால் போக்குவரத்து முடங்கியது
x
தினத்தந்தி 19 Nov 2018 4:30 AM IST (Updated: 19 Nov 2018 2:34 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் கிராம மக்களின் மறியல் போராட்டத்தால் போக்குவரத்து நேற்று பல மணிநேரம் முடங்கியது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, திருச்சிற்றம்பலம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், ஒரத்தநாடு, திருவோணம், பாப்பாநாடு உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் தென்னந்தோப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கிய தென்னை மரங்கள் தரையோடு, தரையாக சாய்ந்து கிடக்கின்றன.

ஒரு தென்னங்கன்று நட்டால் அது வளர்ந்து தேங்காய் காய்ப்பதற்கு 7 ஆண்டுகள் ஆகும். இந்த நிலையில் நன்கு வளர்ந்து பல ஆண்டுகளாக தேங்காய்களை மகசூலாக அளித்த தென்னை மரங்களை ‘கஜா’ புயல் ஒரே நாளில் சாய்த்து விட்டு சென்றிருப் பதால், மக்கள் செய்வது அறியாமல் திகைத்துப் போய் உள்ளனர். வாழ்வாதாரமே அழிந்து விட்டதாக தென்னை விவசாயிகள் கதறுகிறார்கள்.

தென்னை சேத விவரங்களை முறைப்படி கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணம் வழங்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். விரைந்து மின் வினியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று அடுத்தடுத்து சாலை மறியல் போராட்டங்களை நடத்தினார்கள்.

இந்த சாலையில் புயலால் விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்து ஓரளவு சீராக இருந்த நிலையில், மறியல் போராட்டங்கள் காரணமாக நேற்று போக்குவரத்து மீண்டும் முடங்கியது.

தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் பாப்பாநாடு அருகே சின்னக்குமுளை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மரக்கிளைகளை சாலையில் போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்பதை உணர்த்தும் விதமாக சாலையில் அடுப்பு மீது வெறும் பாத்திரத்தை வைத்து கிராம மக்கள் கோஷம் எழுப்பினர். இந்த நிலையில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர் வருவாய்த்துறை அதிகாரிகளை அங்கு வரவழைத்து, கிராம மக்களை சமாதானம் செய்தார். இதனால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதேபோல் உறந்தைராயன்குடிகாடு, சோழகன்குடிகாடு, நெம்மேலி திப்பியக்குடி ஆகிய கிராமங்களிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை- அறந்தாங்கி சாலையில் குறிச்சி அக்னி ஆற்று பாலம் அருகே புனல்வாசல் கிராமத்தை சேர்ந்தவர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். சிவகொல்லை, அதிராம்பட்டினம், செண்டாங்கோட்டை ஆகிய இடங்களிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சையை அடுத்த கோவிலூர் மேலத்தெரு பகுதியில் பொக்லின் எந்திரம் மூலம் மரங்களை அகற்றும் பணி நேற்று நடந்தது. அப்போது சில பகுதிகளில் மட்டும் பணி நடந்ததாக தெரிகிறது. இதுகுறித்து கிராம மக்கள் கேட்டபோது, பொக்லின் எந்திரத்தை இயக்கியவர்கள் சாதி பெயரை கூறி திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் பொக்லின் எந்திரத்தை சிறைப்பிடித்து ஒரத்தநாடு -பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தின்போது குடிநீர் வழங்க வேண்டும். மின் வினியோகம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் அதிகரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. முன்னதாக முன்னாள் மத்திய மந்திரி பழனிமாணிக்கம், கிராம மக்களிடம் கோரிக்கைகளை கேட்டுக்கொண்டு, அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

சாலை மறியலின்போது கிராம மக்கள் மரக்கிளைகளை சாலையின் குறுக்காக போட்டிருந்தனர். இதன் காரணமாக மோட்டார்சைக்கிளில் சென்றிருந்தவர்கள் கூட மறியல் நடைபெற்ற இடங்களை கடந்து செல்ல முடியவில்லை. தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு சாதாரணமாக ஒரு மணி நேரத்தில் செல்லலாம். சாலை மறியல் காரணமாக நேற்று தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை செல்ல 3½ மணி நேரம் ஆனது.

மீட்பு பணிகளுக்காக அதிகாரிகளை அழைத்து சென்ற கார்களும் மறியலில் சிக்கி பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் ஆம்புலன்ஸ் வேன்களுக்கு வழிவிட்டனர்.

Next Story