மந்திரிசபை விரிவாக்கம் செய்ய முடிவு: மந்திரி பதவியை கைப்பற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி


மந்திரிசபை விரிவாக்கம் செய்ய முடிவு: மந்திரி பதவியை கைப்பற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி
x
தினத்தந்தி 18 Nov 2018 10:50 PM GMT (Updated: 18 Nov 2018 10:50 PM GMT)

மந்திரிசபை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதால் மந்திரி பதவியை கைப்பற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் மந்திரிசபையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. காங்கிரஸ் வசம் 6 இடங்களும், ஜனதாதளம்(எஸ்) வசம் ஒரு இடமும் இருக்கிறது. மந்திரிசபையில் காலியாக உள்ள 7 இடங்களையும் நிரப்ப கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன், மேலி்ட பொறுப்பாளர் வேணுகோபால் 2 நாட்கள் ஆலோசனை நடத்தியுள்ளார். அதுபோல, முதல்-மந்திரி குமாரசாமி, ஜனதாதளம்(எஸ்) தேசிய தலைவர் தேவேகவுடாவுடன் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். மேலும் இந்த மாத இறுதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, வருகிற 28-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. என்றாலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்திய பின்பு தான், மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. மந்திரிசபை விரிவாக்கத்துடன், 30 வாரியங்களுக்கான தலைவர் பதவிகளையும் நிரப்ப கூட்டணி கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். அவற்றில் காங்கிரசுக்கு 20 வாரிய தலைவர்கள் பதவியும், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு 10 வாரிய தலைவர்கள் பதவியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மந்திரி பதவி மற்றும் வாரிய தலைவர்கள் பதவிக்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மந்திரி பதவிக்காக காங்கிரஸ் கட்சியில் 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு மந்திரி பதவி கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று கட்சி தலைவர்களுடன் வலியுறுத்தி வருகிறார்கள். மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் மூத்த தலைவர்களை சந்தித்து மந்திரி பதவி வழங்கும்படி எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால் யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பது குறித்து ராகுல்காந்தியுடன் ஆலோசித்து காங்கிரஸ் தலைவர்கள் இறுதி முடிவு எடுக்க தீர்மானித்துள்ளனர்.

என்றாலும், மந்திரி பதவிக்கு ராமலிங்க ரெட்டி, எம்.பி.பட்டீல், பி.சி.பட்டீல், சங்கமேஷ், சி.எஸ்.சிவள்ளி, எம்.கிருஷ்ணப்பா, தன்வீர்சேட், ரஹீம்கான், நாகேந்திரா, துக்காரம் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்களில் 6 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.


Next Story