நிரந்தர பணி ஆணை வழங்க வேண்டும் கலெக்டரிடம் அங்கன்வாடி ஊழியர்கள் மனு
அங்கன்வாடி ஊழியர்கள் தங்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்கவேண்டும் என மக்கள்குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வுநாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். முதலில் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த பகுதிக்கு சென்று அவர்களிடம் கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.
பின்னர் பொதுமக்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வங்கிக்கடன் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கேட்டு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர்.
அந்த கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் கொடுத்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் “18.10.2016 அன்று குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டத்தில் இயங்கும் குழந்தைகள் காப்பகங்களில் பராமரிப்பு பணியில் சேர்ந்தோம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எங்களை பணியில் இருந்து விடுவித்து, டிசம்பர் மாதம் மீண்டும் பணியில் சேர்த்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் எங்களை பணியில் இருந்து மீண்டும் விலக்கிவிட்டதாக வாய்மொழியாக கூறினர். இதுபோன்று எங்களை பணியில் சேர்ப்பதும், நீக்குவதுமாக உள்ளனர். எனவே எங்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்க வேண்டும்” என்று கூறி உள்ளனர்.
பொன்னையை அடுத்த நடுபெத்தநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் “எங்கள் ஊரில் கடந்த 20 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து பட்டா வழங்க முயற்சி செய்து வருகிறார். இந்த இடத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் அன்னதானம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
மேலும் இந்த இடத்தில் விநாயகர் கோவில் கட்டவும் ஊர் பொதுமக்கள் முடிவு செய்துள்ளோம். இந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து பட்டா பெறுவதற்கு முயற்சி செய்யும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தவேண்டும்” என்று கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story