தமிழகத்தில் முதல் முறையாக ஆங்கிலம் ஒலிப்பு முறை கற்றலுக்கான சிறப்பு கையேடு கலெக்டர் வெளியிட்டார்
தமிழகத்தில் ஆங்கிலம் ஒலிப்பு முறை கற்றலுக்கான சிறப்பு கையேட்டை கலெக்டர் கந்தசாமி வெளியிட்டார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் ‘ஆங்கிலம் ஒலிப்பு முறை கற்றலுக்கான சிறப்பு கையேடு’ வெளியீட்டு விழா நேற்று திருவண்ணாமலை நகராட்சி டவுன் ஹால் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் எஸ்.மைதிலி முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் ஜோதி வரவேற்றார். விழாவுக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி, சிறப்பு கையேட்டை வெளியிட்டு பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தை கல்வியில் முன்னேற்றம் அடைய செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ் கற்றலை மேம்படுத்தும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு அது வெற்றியும் பெற்று உள்ளது.
மேலும் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ‘மை சைல்டு, மை கேர்’ என்ற இயக்கம் தொடக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் ஆங்கிலம் கற்றலில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயர்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலானோர் ஆங்கில பாடம் வாசிப்பது மற்றும் எழுதுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
அதனால் தொடக்க நிலை வகுப்புகளில் இருந்தே மாணவர்களுக்கு ஆங்கிலம் வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் சீரிய முயற்சிகள் எடுக்கப்பட்டு தமிழகத்தில் முதல் முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘ஆங்கிலம் ஒலிப்பு முறை கற்றலுக்கான சிறப்பு கையேடு’ தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.38 லட்சம் மதிப்பில் கையேடுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக ரூ.15 லட்சம் மதிப்பில் 2 ஆயிரத்து 500 புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாணவர்களை ஆங்கிலத்தை வாசிப்பதிலும், எழுதுவதிலும் மேம்பாடு அடைய செய்து தமிழ் வாசித்தலில் உலக சாதனை புரிந்தது போன்று, ஆங்கிலம் வாசித்தலிலும் உலக சாதனை புரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளை தூய்மையாக வைத்திருந்த பள்ளிகளுக்கு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். மேலும் சிறப்பு கையேட்டை பெற்றுக் கொண்ட மாணவிகள், அதனை கலெக்டரிடம் வாசித்து காண்பித்தனர்.
விழாவில் கல்வி மாவட்ட அலுவலர்கள் அருள்செல்வம், கந்தசாமி, கருணாகரன், பள்ளி துணை ஆய்வாளர்கள் குமார், தன்ராஜ், வெங்கடகிருஷ்ணன், திருவண்ணாமலை வட்டார கல்வி அலுவலர் பவானி, காஞ்சீபுரம் திருப்பேரூர் தாலுகா நெல்லிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் அய்யப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் திருவண்ணாமலை நகராட்சி டவுன் ஹால் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் டெய்சிராணி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story