ஆணவ கொலையில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை வழங்க சட்டத்திருத்தம் - ஜான் பாண்டியன் வலியுறுத்தல்
ஆணவ கொலையில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை வழங்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
ஊட்டி,
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். பின்னர் அவர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்து விட்டு வெளியே வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு கம்பெனி தேயிலை தோட்டங்களில் தீபாவளி பண்டிகைக்கு 20 சதவீத போனஸ் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. சேலாஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் 1,500 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இந்த தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கக்கோரி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொழிற்சங்க நிர்வாகிகள் தேயிலை தோட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தைக்கு சென்றனர்.
அப்போது அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கம் என்று கூறி 20 சதவீத போனஸ் வழங்க மறுப்பு தெரிவித்தனர். தொழிலாளர்கள் வசித்து வரும் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. தேயிலை தொழிலாளர்களுக்கு உரிய போனஸ் வழங்க வேண்டும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கக்கோரி கலெக்டரை சந்தித்து மனு அளித்தேன். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.
தமிழகத்தில் கஜா புயலால் வேதாரண்யம், திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கும், விவசாயிகளுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. புயலில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற நன்றாக தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டு மின் இணைப்பு வழங்குதல், மரங்களை அப்புறப்படுத்துதல், பொதுமக்களுக்கு தேவையான உணவு வசதி போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக முதல்-அமைச்சர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக பார்வையிட உள்ளதால், சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்கும் பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். அப்போது தான் முதல்-அமைச்சர் நேரடியாக சென்று பார்வையிட முடியும். தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் புயலால் பாதித்த மக்களுக்கு நிவாரண பணிகளை சரியாக செய்யவில்லை என்றும், முதல்-அமைச்சர் பார்வையிடவில்லை என்றும் கூறி வருகிறார். ஆனால் மு.க.ஸ்டாலின் எந்தந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார் என்று தெரிவிக்கவில்லை. எதிர்க்கட்சியாக இருப்பதால் அரசியல் செய்து வருகிறார்.
18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தல் வருகிற பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படும், இனி வரும்காலத்தில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை காண முடியும் என்பது எனது கருத்து. நாட்டில் ஆணவ கொலை சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க பல சட்டங்கள் இருந்தும், கொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. எனவே ஆணவ கொலையில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை வழங்கும் சட்டத்திருத்தத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது நீலகிரி மாவட்ட தலைவர் சிவா உடனிருந்தார்.
Related Tags :
Next Story