மின் கசிவால் குடிசை வீடு எரிந்து மூதாட்டி கருகி பலி கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் விபரீதம்


மின் கசிவால் குடிசை வீடு எரிந்து மூதாட்டி கருகி பலி கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் விபரீதம்
x
தினத்தந்தி 20 Nov 2018 4:00 AM IST (Updated: 19 Nov 2018 10:59 PM IST)
t-max-icont-min-icon

தேசூரில் மின் கசிவால் குடிசை வீடு எரிந்து மூதாட்டி உடல் கருகி பலியானார். மேலும் கியாஸ் சிலிண்டர் வெடித்தது.

சேத்துப்பட்டு, 

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த தேசூர் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேமநாதன். இவரது மனைவி யசோதை (வயது 63). இவர்களுக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவர்கள் சென்னை, புதுச்சேரியில் வசித்து வருகின்றனர். தேசூரில் சேமநாதன் மனைவி யசோதையுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று காலை 6 மணி அளவில் சேமநாதன் டீக்கடைக்கு சென்றுள்ளார். வீட்டில் யசோதை மட்டும் தனியாக இருந்தார். அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு வீட்டின் மேல் பகுதியில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் மளமளவென வீடு முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சித்தபோது எதிர்பாராதவிதமாக வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து மேலும் தீ பரவியது. இதில் சிக்கிக்கொண்ட யசோதை சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலர் திருநாவுக்கரசு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர். மேலும் தேசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மதியழகன், உத்தமபுத்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story