சூளகிரியில் கொலையுண்ட பெண் அடையாளம் தெரிந்தது தங்கை கணவருக்கு போலீஸ் வலைவீச்சு


சூளகிரியில் கொலையுண்ட பெண் அடையாளம் தெரிந்தது தங்கை கணவருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Nov 2018 4:00 AM IST (Updated: 19 Nov 2018 11:31 PM IST)
t-max-icont-min-icon

சூளகிரியில் கொலையுண்ட பெண் அடையாளம் தெரிந்தது. இது தொடர்பாக அவரது தங்கை கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வனப்பகுதியில் பெண் ஒருவர் கொலையுண்டு கிடப்பதாக சூளகிரி போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த பெண்ணின் கழுத்து பகுதி அறுக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன. மேலும் அருகில் பெரிய பாறாங்கல் இருந்தது.

இதைத் தவிர குளிர்பானம் ஒன்றும், இனிப்பு பொட்டலம் ஒன்றும் அருகில் கிடந்தன. அந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்கள்.

இதற்கிடையே தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா எர்ரனஅள்ளியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி ஈஸ்வரி (வயது 33) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய் இருந்தார். அது தொடர்பாக அவரது உறவினர்கள் பாலக்கோடு போலீசில் புகார் செய்திருந்தனர். அதன் பேரில் பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன ஈஸ்வரியை தேடி வந்தார்.

நேற்று காலை பத்திரிகையில் சூளகிரியில் பெண் கொலை செய்தியை படித்த ஈஸ்வரியின் உறவினர்கள் அது ஈஸ்வரியாக இருக்கலாம் என்று கருதி ஓசூர் வந்தனர். அவர்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்த உடலை பார்த்தும், அவர் அணிந்திருந்த சேலை ஆகியவற்றை கொண்டு கொலையுண்டு கிடந்தது ஈஸ்வரி தான் என உறுதி செய்தனர். இதையடுத்து ஈஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஈஸ்வரிக்கும், அவரது தங்கை கணவர் பழனிசாமிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈஸ்வரி மாயமானது முதல் பழனிசாமியையும் காணவில்லை. இதனால் அவர் ஈஸ்வரியை கொலை செய்து விட்டு தப்பி ஓடி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதன் பேரில் பழனிசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story