குரங்கணி மலைக்கு: இஸ்ரேல் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற வழிகாட்டி கைது


குரங்கணி மலைக்கு: இஸ்ரேல் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற வழிகாட்டி கைது
x
தினத்தந்தி 20 Nov 2018 3:30 AM IST (Updated: 20 Nov 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

போடி டாப் ஸ்டேஷனில் இருந்து குரங்கணி மலைக்கு அனுமதியின்றி இஸ்ரேல் சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த வழிகாட்டியை வனத்துறையினர் கைது செய்தனர்.

போடி, 

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 6 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் மூணாறு வந்தனர். அவர்களுக்கு மூணாறு நல்ல தண்ணீர் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த ரவி (வயது 46) என்பவர் வழிகாட்டியாக இருந்தார்.

இவர் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளை மூணாறிலிருந்து தேனி மாவட்டம் போடி டாப்ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கிருந்து அவர்களை குரங்கணிக்கு வனத்துறையினரின் அனுமதி பெறாமல் மலையேற்ற பயிற்சிக்கு (டிரெக்கிங்) அழைத்து சென்றார்.

அவர்கள் குரங்கணி வரும்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்களை வனத்துறையினர் போடி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரிக்கும்போது அவர்கள் 6 பேரும் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தப்பி ஓடினர். அவர்களை இரவோடு இரவாக வனத்துறை மற்றும் போடி நகர் போலீசார் தேடிப்பிடித்து மீண்டும் வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் குரங்கணி வழியாக மலையேற்ற பயிற்சிக்கு வரக்கூடாது என்பது எங்களுக்கு தெரியாது. இதுபற்றி தெரிவிக்காமல் வழிகாட்டி எங்களை அழைத்து வந்து விட்டார். இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என தனித்தனியாக எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுத்தனர். பின்னர், இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுப்பி வைத்தனர். சுற்றுலா வழிகாட்டி ரவியை கைது செய்தனர்.

Next Story