ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் வஸ்திர மரியாதை


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் வஸ்திர மரியாதை
x
தினத்தந்தி 20 Nov 2018 4:00 AM IST (Updated: 20 Nov 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வஸ்திர மரியாதை நேற்று வழங்கப்பட்டது.

ஸ்ரீரங்கம்,

கி.பி.1,320-ம் ஆண்டு மாற்று மதத்தினர் ஸ்ரீரங்கத்திற்கு படையெடுத்தனர். இதன் காரணமாக சுமார் 40 ஆண்டு காலம் ஸ்ரீரங்கம் கோவில் நம்பெருமாள் திருமலை கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டார். இவ்வாறு அவர் வைக்கப்பட்டிருந்த மண்டபம் திருமலை கோவிலில் ரெங்கநாயகலு மண்டபம் என்னும் பெயரில் இன்றும் உள்ளது.

நம்பெருமாள் திருமலையில் இருந்த ரெங்கநாயகலு மண்டபத்தில் தான் அக்கோவிலின் முக்கிய நிகழ்வுகள் பல இன்றளவும் நடைபெறுகின்றன. திருமலைக்கும், ஸ்ரீரங்கத்துக்கும் நீண்டகாலமாக மங்கல பொருட்கள் பரிவர்த்தனை இருந்தது. காலபோக்கில் அவை நின்று போயின. தற்போது அவை ஒவ்வொன்றாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இவ்வகையில் ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி நாளில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் இருந்து புது வஸ்திர மரியாதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி இந்த ஆண்டு ரெங்கநாதர் மூலவர், நம்பெருமாள் உற்சவர், ஸ்ரீரெங்கநாச்சியார் மற்றும் ராமானுஜருக்கு வஸ்திரங்கள், குடைகள் உள்ளிட்ட மங்கல பொருட்களை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அணில்குமார்சிங்கால், பொக்கிஷ பொறுப்பாளர் குருராஜன் ஆகியோர் தலைமையிலான குழுவினர், அர்ச்சகர்கள் நேற்று முன்தினம் இரவு எடுத்து வந்தனர்.

நேற்று காலை 6.45 மணி அளவில் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீரங்கவிலாச மண்டபத்தில் இருந்து திருப்பதி வஸ்திர மரியாதை புறப்பட்டு கருடமண்டபம் வந்தது. அதன்படி மங்கல பொருட்கள் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அங்கு கோவில் இணை ஆணையர் ஜெயராமன், தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், கண்காணிப்பாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் வஸ்திர மரியாதைகளை பெற்றுக்கொண்டனர். 

Next Story