இலவச வீட்டுமனைப்பட்டா நிலத்தை காட்டக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி குடும்பத்துடன் தர்ணா சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
இலவச வீட்டு மனைப்பட்டா நிலத்தை காட்டக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் ஏற்காடு தாலுகாவிற்கு உட்பட்ட மல்லிகுந்தம் பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி காந்தி என்கிற கலைச்செல்வன் நேற்று தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டார்.
உடனே அங்கு பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கலைச்செல்வன் தனது குடும்பத்தினருடன் சென்று கலெக்டரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் கூலித்தொழிலாளி. எனது மனைவி விமலா மாற்றுத்திறனாளி. எனக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். எனக்கு பூர்வீகமாக சொந்தமாக வீட்டுமனை இல்லை. விவசாய நிலமும் இல்லை. எனவே இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க கோரி பலமுறை மனு கொடுத்தேன். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு மல்லிகுந்தம் கிராமப்பகுதியில் எனது மனைவி பெயரில் அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கி 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பட்டாவிற்கான நிலத்தை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் காண்பிக்க வில்லை.
இது சம்பந்தமாக பலமுறை மனு கொடுத்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் என்னையும், மாற்றுத்திறனாளியான எனது மனைவியையும் அலைக்கழிக்கிறார்கள். எனவே எங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப்பட்டாவுக்கான நிலத்தை காட்ட வேண்டும். இதற்காக போராட்டம் நடத்த முடிவு செய்து கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story