தண்ணீர் கேட்டு விவசாயிகள் தர்ணா


தண்ணீர் கேட்டு விவசாயிகள் தர்ணா
x
தினத்தந்தி 20 Nov 2018 4:45 AM IST (Updated: 20 Nov 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் கேட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய்அதிகாரி முத்துமாரி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.

ராமநாதபுரம் பெரியகண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பில் தலைவர் பாலசுந்தரமூர்த்தி தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் போது கடைமடை பகுதியான ராமநாதபுரம் பெரியகண்மாய்க்கு முதலில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது அடிப்படை உரிமையாகும். இதன்பின்னரே படிப்படியாக கடைமடையில் இருந்து மற்ற கண்மாய்களுக்கு தண்ணீர்திறந்து விட வேண்டும். ஆனால், தற்போது பெரிய கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிடப்படாமல் பிற கண்மாய்களுக்கு தண்ணீர்திறந்துவிட முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், பெரிய கண்மாய் நீரினை நம்பி விவசாயம் செய்துள்ளவர்கள் பாதிக்கப்பட்டுஉள்ளனர். பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. விவசாயிகளுக்கு நஷ்டத்தை போக்க உடனடியாக பெரிய கண்மாய்க்கு உரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

ராமநாதபுரம் சக்கரக்கோட்டை மஞ்சன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமநாதன் மனைவி அனுசுயா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– எனது கணவர் சவுதிஅரேபியாவிற்கு வேலைக்கு சென்ற நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் நிறுவன உரிமையாளருடன் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன்பின்னர்அவரிடம் இருந்து எந்த தொடர்பும் இதுவரை இல்லை.அவர் என்ன ஆனார் என்பது குறித்து தெரியவில்லை. 2 குழந்தைகள் மற்றும் கணவரின் பெற்றோருடன் தவித்து வருகிறேன்.

ராமநாதபுரம் மாவட்டம் மாலங்குடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பெரியகண்மாய்,தென்கால்வாய், குண்டாறு கால்வாயை மல்லல் பகுதியினர் ஆண்டாண்டு காலமாக தண்ணீரை அடைத்து வைத்துக்கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சமாதான கூட்டம் நடத்திய பின்னரே தண்ணீரை திறக்கின்றனர். இதேபோல இந்த ஆண்டும் கண்மாயை அடைப்பதற்கு முன்னர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தண்ணீர் கிடைக்கசெய்ய வேண்டும் என்று கோரி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் வீரராகவராவ் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story