மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 19 Nov 2018 10:45 PM GMT (Updated: 19 Nov 2018 7:53 PM GMT)

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நேற்று பெரம்பலூர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடந்தது. போட்டியினை தமிழ்நாடு சிறப்பு ஒலிம்பிக் பிரிவு செயலாளர் பால் தேவ சகாயம் தொடங்கி வைத்தார். தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் கை, கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாதோர் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடைபெற்றது.

தடகள போட்டிகளில் கை, கால் ஊனமுற்றோர் பிரிவில் 50, 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளும், குள்ளமானவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயமும், இருகால்களும் ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டிகளும் நடைபெற்றது.

பார்வையற்றோர் பிரிவில்...

பார்வையற்றோர் பிரிவில் முற்றிலும் பார்வையற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயமும், குண்டு எறிதல் போட்டிகளும், மிகக்குறைந்து பார்வையற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நின்ற நிலை தாண்டுதல், பந்து எறிதல் போட்டிகளும், தனித்தனியாக நடந்தது. மனநலம் பாதிக்கப்பட்டவர் பிரிவில் புத்தி சுவாதினம் முற்றிலும் இல்லாதோருக்கு 50 மீட்டர் ஓட்டம், பந்து எறிதல் போட்டிகளும், புத்தி சுவாதினம் நல்ல நிலையில் இருப்போருக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், பந்து எறிதல் ஆகிய போட்டிகளும், மூளை நரம்பு பாதிப்பு (செரிபரல் பராலிசிஸ்) உள்ளோருக்கு நின்ற நிலையில் தாண்டுதல் போட்டிகளும் நடந்தது.

காது கேளாதோர் பிரிவில் 100, 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தயமும், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. குழு விளையாட்டு போட்டிகளில் கை, கால் ஊனமுற்றோர் பிரிவில் இறகுப்பந்து, மேஜைப்பந்து ஆகிய போட்டிகளும் நடைபெற்றது.

பரிசளிப்பு

தடகள விளையாட்டு போட்டிகளில் 426 நபர்களும், குழு விளையாட்டு போட்டிகளில் 500 நபர்களும் மொத்தம் 926 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அதிகாரி காமாட்சி தடகள போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கும், குழுப்போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளுக்கும் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். முன்னதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராமசுப்பிரமணியராஜா வரவேற்றார். முடிவில் தடகள பயிற்றுனர் கோகிலா நன்றி கூறினார். மாவட்ட அளவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகள், அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story