குடும்பம் நடத்தவர மனைவி மறுப்பு: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


குடும்பம் நடத்தவர மனைவி மறுப்பு: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Nov 2018 4:00 AM IST (Updated: 20 Nov 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

மனைவி குடும்பம் நடத்த வரமறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூர் பிச்சிப்பூ தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 27). இவரும், அதே பகுதியை சேர்ந்த சம்பூர்ணம்(24) என்பவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கவின்(2) என்ற மகனும், 3 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் சம்பூர்ணம், கணவருடன் கோபித்துக்கொண்டு அருகில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவதும், பின்னர் மணிகண்டன் அவரை சமரசம் செய்து அழைத்து வருவதும் வழக்கமாக இருந்தது.

நேற்று முன்தினம் வழக்கம்போல் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் சம்பூர்ணம் கணவருடன் கோபித்துக்கொண்டு தனது மகன்களுடன் தாம்பரத்தில் உள்ள அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டார். மணிகண்டன் அங்கு சென்று மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்தார். ஆனால் அவர் வரமறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதனால் மனம் உடைந்த மணிகண்டன், தனது வீட்டில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் ரெயில்வே ஸ்டேஷன் தெருவைச் சேர்ந்தவர் லோகசுந்தர்(19). இவர், சென்னையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து முடித்துவிட்டார். ஆனால் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த லோகசுந்தர் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story