ஏரல் அருகே முதுமக்கள் தாழிகளை அகழாய்வு செய்தால் இரும்புகால மனிதர்களின் பண்பாட்டை அறியலாம் அரசுக்கு சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் தொல்லியல் துறை அதிகாரி தகவல்
ஏரல் அருகே சிவகளை பரும்பு பகுதியில் முதுமக்கள் தாழிகளை அகழாய்வு செய்தால் இரும்புகால மனிதர்களின் பண்பாட்டை அறியலாம் என்று அரசுக்கு சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் தொல்லியல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஏரல்,
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா சிவகளை பரும்பு பகுதியில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு தொல்பொருட்கள், இடை கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதியை அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்று சிவகளையைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் மாணிக்கம், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பினார்.
தொடர்ந்து நாகர்கோவில் தொல்லியல் அலுவலர் (பொறுப்பு) லோகநாதன் சிவகளை பரும்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பித்து உள்ளார்.
அதில் கூறி இருப்பதாவது:-
ஏரல் தாலுகா சிவகளையில் தாமிரபரணி ஆற்றின் கரையில் மேடான பரும்பு பகுதி அமைந்துள்ளது. இங்கு சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் முதுமக்கள் தாழிகளின் எச்சங்கள் பரந்து விரிந்து காணப்படுகிறது.
இங்குள்ள செம்மண், சரள் மண்ணை சிலர் அள்ளிச் செல்வதால், பல இடங்களில் முதுமக்கள் தாழிகள் சிதறிக் காணப்படுகின்றன.
இதுபோன்ற தாழிகளில் வைக்கப்பட்டு இருந்த சுடுமண்ணாலான மட்கலயங்கள், தாங்கிகள், சுத்தி, வாள், குதிரை லாடம், அம்பு முனைகள் போன்ற இரும்பிலான கருவிகள், தாழிகளில் இருந்து எடுக்கப்பட்ட எலும்பு பகுதிகள் போன்றவையும் சிதறிக் காணப்படுகின்றன.
ஆதிச்சநல்லூரில் இருப்பதைப் போன்று இப்பகுதியிலும் முதுமக்கள் தாழிகள் இருப்பதை காண முடிகின்றது. இது இரும்புகால மனிதர்களின் இறந்தவர்களைப் புதைக்கும் பழக்கத்தினை வெளிப்படுத்துகின்றது. இப்பகுதியில் எங்கு பார்த்தாலும் முதுமக்கள் தாழிகள் உடைந்த நிலையில் காணப்படுவதால், வரலாற்று சிறப்புமிக்க பகுதியாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, இப்பகுதியை அகழாய்வு செய்வதின் மூலம் இரும்புகால மனிதர்களின் பெரும் கற்கால பண்பாட்டினை வெளிக் கொணரலாம். மேலும் இப்பகுதி மக்களின் வாழ்விட பகுதியும் முதுமக்கள் தாழிகள் அமைந்துள்ள பக்கத்திலேயே இருந்திருக்க வேண்டும்.
ஆனால் நேரடி மேற்படி கள ஆய்வில் வாழ்வியல் குடியிருப்பு பகுதிகள் இருந்ததற்கான தடயங்கள் ஏதும் கண்டறியப்பட முடியவில்லை.
சிவகளை பரும்பு பகுதியில் சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் தங்களுக்கு தேவையான மண்ணை அள்ளி எடுத்து சென்று அழித்துள்ளனர். சில பகுதிகளில் மின்சாரத்துறையினர் துணை மின் நிலையம், தார் சாலை அமைத்துள்ளனர்.
அழிவு ஏற்படாமல் மீதம் இருக்கும் பகுதிகளில் இருக்கும் முதுமக்கள் தாழிகளை அகழாய்வு செய்வதன் மூலம் இரும்புகால மனிதர்களின் பண்பாட்டை அறியலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story