ஓடும் லாரியில் பயங்கர தீ ரூ.14 லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் சாம்பல்
கோவில்பட்டி அருகே ஓடிக்கொண்டிருந்த லாரி தீப்பிடித்து எரிந்ததில் அதில் இருந்த ரூ.14 லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. டிரைவர் லாரியை நிறுத்தாமல், சாமர்த்தியமாக ஊருணிக்குள் ஓட்டிச் சென்று நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கோவில்பட்டி,
கழுகுமலையில் உள்ள தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் இருந்து சுமார் 4 ஆயிரம் தீப்பெட்டி பண்டல் லோடு ஏற்றிய லாரி நேற்று மாலையில் ராஜஸ்தான் மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றது.
அந்த லாரியை நாமக்கல்லைச் சேர்ந்த சுகுமார் (வயது 40) ஓட்டிச் சென்றார்.
மாலை 6.30 மணி அளவில் கோவில்பட்டி அருகே காலாங்கரைப்பட்டி அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக லாரியில் உள்ள தீப்பெட்டி பண்டல்களில் தீப்பிடித்து எரிந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.
சுதாரித்துக் கொண்ட டிரைவர் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள வானரமுட்டி ஆயா ஊருணிக்கு லாரியை ஓட்டிச் சென்றார். அந்த ஊருணியில் தண்ணீர் நிரம்பி இருந்தது.
இதையடுத்து அந்த ஊருணிக்குள் சிறிதுதூரம் லாரியை ஓட்டிச் சென்று நிறுத்தி விட்டு, டிரைவர் கீழே குதித்து, நீந்தி கரைக்கு வந்தார். தொடர்ந்து டிரைவர் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, ஊருணியில் உள்ள தண்ணீரை வாளிகளில் எடுத்து, லாரியில் ஊற்றி தீயை அணைக்க போராடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி மற்றும் கழுகுமலை தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 1½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
முன்னதாக தீப்பெட்டி பண்டல்களில் தீப்பற்றிய நிலையில் லாரியை ஓட்டி சென்றதால், சாலையோரம் வழிநெடுகிலும் தீப்பெட்டி பண்டல்கள் சரிந்து கிடந்தன. அவற்றில் தீப்பற்றி எரிந்தது. அவற்றின் மீதும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
லாரியில் ஏற்றப்பட்ட தீப்பெட்டி பண்டல்களில் மின் கம்பி அல்லது மரக்கிளை உரசியதில் தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீ விபத்தில் சுமார் ரூ.14 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து சேதம் அடைந்தன.
இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓடும் லாரியில் தீப்பெட்டி பண்டல்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story