திண்டுக்கல் மாநகராட்சியில்: குடியிருப்பு பகுதிகளில் உரப்பூங்கா அமைக்க எதிர்ப்பு - கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


திண்டுக்கல் மாநகராட்சியில்: குடியிருப்பு பகுதிகளில் உரப்பூங்கா அமைக்க எதிர்ப்பு - கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 20 Nov 2018 3:30 AM IST (Updated: 20 Nov 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாநகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் உரப்பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் டி.ஜி.வினயிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல், 


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். இதற்கிடையே, திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கியமாதா தெரு மக்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

திண்டுக்கல் மாநகராட்சி 17 மற்றும் 31-வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இங்குள்ள 60 அடி அகல சாலையை ஆக்கிரமித்து மாநகராட்சி சார்பாக உரப்பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளனர். குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்டி உரம் தயாரித்தால் சுற்றுவட்டாரங்களில் மாசு ஏற்படும். இதனால், குழந்தைகள் முதல் அனைவருக்கும் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, உரப்பூங்காவை குடியிருப்பு இல்லாத புறநகர் பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல பன்றிமலை கிராம மக்கள் சார்பில் முருகானந்தம் கொடுத்த மனுவில், ‘கஜா’ புயலால் ஏராளமான சவுக்கு, எலுமிச்சை மரங்கள் சாய்ந்துள்ளன. இவற்றுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும். மேலும், முறிந்த மரங்களை வெட்டி திண்டுக்கல்லில் உள்ள சந்தைகளில் விற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் மாவட்ட தலைவர் முத்துராஜ் கொடுத்த மனுவில், அமைப்புசாரா நலவாரியத்தில் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டும் பல மாதங்களாக ஓய்வூதியம் கிடைக்கவில்லை. இதனால் முதியவர்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதேபோல கட்டுமான நலவாரியங்களிலும் ஏராளமான மனுக்கள் நிலுவையில் உள்ளதால் பணபலன்களை பெற முடியாமல் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

இதற்கிடையே மன்னார்குடியை சேர்ந்த ஜீயர் செந்தலங்கார செண்பகமன்னர் ராமானுஜதாசன் கொடுத்த மனுவில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான குளம், ஏரி, ஆறுகள் தூர்ந்துபோய் உள்ளன. இதனால் மழைநீரை சேமிக்க முடியாததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடகனாறு, சாந்தானவர்த்தினி உள்ளிட்ட ஆறுகளை தூர்வார உள்ளோம். இதற்கு, அரசு அனுமதி அளிப்பதுடன் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல முள்ளிப்பாடி ஊராட்சி பொதுமக்கள் கொடுத்த மனுவில், சீலப்பாடி ஆயுதப்படை போலீசார் குடியிருப்பின் பின்பகுதியில் சுப்பிரமணியபுரம் உள்ளது. இந்த பகுதியில் ‘கஜா’ புயலால் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதுதொடர்பாக புகார் அளித்தும் மின்கம்பங்களை சீரமைக்காததால் 4 நாட்களாக இருளில் தவித்து வருகிறோம். உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்வினியோகம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Next Story