காதலன் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை
காதலன் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்துகொண்டார்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் காங்கேயம் ரோடு காங்கேயம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (வயது 52). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய 3–வது மகள் பானுப்பிரியா (25). இவர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு மகளுடைய காதல் விவகாரம் ஈஸ்வரமூர்த்திக்கு தெரிய வந்துள்ளது. அப்போது பானுப்பிரியா திருமணம் செய்தால் தான் உயிருக்கு உயிராக காதலிக்கும் அந்த வாலிபரைதான் திருமணம் செய்து கொள்வேன் என்று அவருடைய தந்தையிடம் கூறி உள்ளார். இதையடுத்து ஈஸ்வரமூர்த்தி அந்த வாலிபரின் பெற்றோரிடம் சென்று மகளின் காதல் விவகாரம் குறித்து பேசி உள்ளார். மேலும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது பற்றியும் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் பானுப்பிரியாவின் காதலனின் பெற்றோர் அவர்களுடைய காதலை ஏற்கவில்லை.
மேலும் திருமணத்திற்கு சம்மதிக்கவே முடியாது என்றும் கூறி உள்ளார். இந்த தகவல் பானுப்பிரியாவுக்கு தெரிந்துவிட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். அங்கு அவர் வேலை பார்த்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பானுப்பிரியா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் தன்னுடைய காதலை காதலன் பெற்றோர் ஏற்காததால் விரக்தியடைந்த பானுப்பிரியா தூக்க மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.