கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு உபகரணங்கள் அனுப்பி வைப்பு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு உபகரணங்கள் அனுப்பி வைப்பு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 19 Nov 2018 10:30 PM GMT (Updated: 19 Nov 2018 8:07 PM GMT)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தூத்துக்குடியில் இருந்து மீட்பு உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதல் குறித்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புகார் வந்தது. இந்த புழுத்தாக்குதலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து தாக்கம் அதிகம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் சென்னையில் இருந்து விஞ்ஞானிகள் வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

பயிர் காப்பீடு திட்டத்தில், மக்காச்சோளம் பயிருக்கு பிரிமியம் தொகை செலுத்தினால், காப்பீடு தொகை பெற முடியும்.

மேலும் படைப்புழு தாக்குதலால் ஏற்பட்ட இழப்பு குறித்து ஆய்வு செய்து, தேவைப்பட்டால் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் சில கல்வி நிறுவனங்களில் கூட அதிக அளவில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் நிலை இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. 2 தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள தண்ணீரில் அதிக அளவில் கொசுப்புழுக்கள் இருந்ததால், தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த மாதம் இதுவரை மாவட்டம் முழுவதும் கொசுப்புழு கண்டறியப்பட்ட நிறுவனங்கள், வீடு உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உள்ளோம்.

கடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகிறது. அது போன்ற எச்சரிக்கை வந்தால், விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் பாதுகாப்பு நலன் கருதி, அவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கூறுகிறோம்.

முக்கியமாக எந்த பகுதிகளில் பாதிப்பு இருக்கும் என்பது குறித்து அறிக்கைகள் வருகிறது. இதனை மீனவர்களிடம் கொண்டு சேர்ப்பது நம்முடைய பொறுப்பு. அதனை மீனவர்கள் புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி மேற்கொள்வதற்காக தூத்துக்குடியில் இருந்து மீட்பு உபகரணங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. தூத்துக்குடியில் நிவாரண பொருட்கள் சேகரிப்பு மையமும் அமைக்கப்பட்டு உள்ளது. மின்கம்பங்களை நடுவதற்காக கிரேன்கள் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மரங்களை வெட்டுவதற்கான எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. தஞ்சை, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு அனுப்ப உள்ளோம்.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஜிப்சம், ராக்பாஸ்பேட், தாமிரதாது அகற்றும் பணி நடந்து வருகிறது. 15 ஆயிரத்து 613 டன் ஜிப்சம், 6 ஆயிரத்து 127 டன் ராக்பாஸ்பேட் அகற்றப்பட்டு உள்ளது. ராக்பாஸ்பேட் 90 சதவீதம் அகற்றப்பட்டு உள்ளது. தாமிரதாது உள்ளிட்ட அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story