கஜா புயல் பாதிப்பில் இருந்து மீளாத எஸ்.புதூர் பகுதிகள்; குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பு


கஜா புயல் பாதிப்பில் இருந்து மீளாத எஸ்.புதூர் பகுதிகள்; குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பு
x
தினத்தந்தி 20 Nov 2018 4:30 AM IST (Updated: 20 Nov 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயல் பாதிப்பில் இருந்து மீளாத எஸ்.புதூர் பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

எஸ்.புதூர்,

மாவட்டத்தில் கஜா புயலால் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை, சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. இதையொட்டி இந்த இடங்களில் பல்வேறு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் பகுதிகள் இந்த கஜா புயலால் பாதிக்கப்பட்டன. எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட புழுதிப்பட்டி, பிரான்பட்டி, செட்டிக்குறிச்சி, கே.புதுப்பட்டி, கரிசல்பட்டி, கிழவயல், மாந்தக்குடிப்பட்டி, கட்டுக்குடிப்பட்டி, மேலவண்ணாயிருப்பு, வாராப்பூர் உள்பட பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த 200-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், 500-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து இந்த பகுதிகளில் மீட்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து 4 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மேலும் இந்த பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். வயல்வெளியில் இருந்த நெல்பயிர்கள், வாழைத்தோட்டங்கள், பப்பாளி தோட்டங்கள் ஆகியவை முற்றிலும் சேதமடைந்ததால் இந்த பகுதி விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். இந்தநிலையில் அந்தந்த ஊராட்சி சார்பில் டிராக்டர்கள் மூலம் குடிதண்ணீர் கொண்டு வந்து இந்த பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

தண்ணீர் பிடிப்பதற்காக இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வெகு நேரம் காத்திருந்து வருகின்றனர். தொடர்ந்து இந்த பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் வெளி தொடர்புக்கு செல்போனை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இதையடுத்து தனியார் கடையில் உள்ள ஜெனரேட்டர் மூலம் ரூ.20 கொடுத்து சார்ஜ் ஏற்றும் நிலை உருவாகி உள்ளது. மேலும் மின்சாரம் இல்லாததால், வீடுகளில் மின்மோட்டார்களை இயக்க முடியாமல், அத்தியாவசிய தேவையை கூட நிறைவேற்ற முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சிறிய ஜெனரோட்டர் மூலம் மணிக்கு ரூ.ஆயிரம் வாடகையாக கொடுத்து சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீரை நிரப்பி வருகின்றனர். ஒரு சில இடங்களில் மின்சப்ளை கொடுக்கப்பட்டு வருகிறது. மற்ற இடங்களுக்கு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதேபோல் காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான், கொத்தமங்களம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் மின்வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மின்வாரிய அதிகாரிகள் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story