மாநகராட்சியின் வரிவிதிப்பு முறையை கண்டித்து முகப்பேர் பஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


மாநகராட்சியின் வரிவிதிப்பு முறையை கண்டித்து முகப்பேர் பஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Nov 2018 4:15 AM IST (Updated: 20 Nov 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சியின் வரிவிதிப்பு முறையை கண்டித்து முகப்பேர் பஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பத்தூர்,

சென்னை மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட முகப்பேர், முகப்பேர் மேற்கு, நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 40 ஆயிரத்திற்கும் ஏற்பட்ட குடியிருப்பு உள்ளது.

இப்பகுதிகள் சென்னை மாநகராட்சி உடன் இணைக்கப்பட்ட பின்பு சொத்துவரி, வீட்டு வரி, தண்ணீர் வரி உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக சொத்துவரி அண்ணாநகர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் சதுர அடிக்கு 1 ரூபாய் 80 பைசா என்று மாநகராட்சி வரி நிர்ணயம் செய்த நிலையில் அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட முகப்பேர், முகப்பேர் மேற்கு, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சதுர அடிக்கு 3 ரூபாய் 50 பைசாவிலிருந்து 5 ரூபாய் வரை வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் வரிவிதிப்பு முறையை கண்டித்து அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பொதுநல சங்கங்கத்தினர் முகப்பேர் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் மாநகராட்சி தன்னிச்சையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:- இது மிகக் கடுமையான வரி உயர்வு. இதனை அடியோடு ரத்து செய்து சென்னை மாநகரம் முழுவதும் சொத்து வரி, வீட்டு வரி உள்ளிட்டவற்றை ஒரே அளவில் நிர்ணயிக்க வேண்டும்.

வரி உயர்வு தொடர்பாக மாநகராட்சி மண்டல அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஆனால் அவர்கள் தங்களுக்கும் இந்த வரி விதிப்புக்கும் சம்பந்தமில்லை, சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் இதுகுறித்து முறையிடுங்கள் என்று கூறி எங்களை அலைக்கழிக்கின்றனர்.

அதுமட்டும் இன்றி புதிய வரிவிதிப்பு நிர்ணயிக்கப்பட்டவர்கள் 15 நாட்களுக்குள் இதுகுறித்த தங்களின் ஆட்சேபணைகளை மண்டல அலுவலகத்தில் தெரியப்படுத்த வேண்டும். அப்படி 15 நாட்களுக்குள் தெரியப்படுத்தவில்லை எனில் அறிவிப்பை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டதாக மாநகராட்சி கருதிக்கொள்ளும் என்றும் மாநகராட்சி மண்டல அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால் வரி விதிப்பு பற்றி ஆட்சேபணைகளை தெரிவிக்க அம்பத்தூர் மண்டலத்திற்கு சென்றால் அம்பத்தூர் மண்டல அதிகாரிகளோ, வருவாய்த் துறை அதிகாரிகளோ ஒத்துழைப்பு அளிப்பதில்லை. பெரும்பாலான குடியிருப்புகளை வணிக வளாக பகுதியில் இருப்பதாக கணக்கெடுத்து மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் வரியை தன்னிச்சையாக அதிகப்படுத்தி அறிவிக்கின்றனர்.

அப்படி அதிகபட்ச சொத்துவரி, வீட்டு வரி விதிக்கும் பட்சத்தில் மாநகர குடிநீர் வரி 3 சதவீதம் அதிகப்படுத்தி வசூலிக்கின்றனர். எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மாநகராட்சி சென்னை முழுவதற்கும் ஒரே மாதிரியான வரி நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story