விளாத்திகுளம்-எட்டயபுரம் தாலுகாக்களில் நோயால் பாதிக்கப்பட்ட சோள பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
விளாத்திகுளம், எட்டயபுரம் தாலுகாக்களில் படைப்புழு நோயால் பாதிக்கப்பட்ட சோள பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது ஸ்ரீவைகுண்டம் வல்லநாடு அருகே உள்ள வடக்கூர் அனந்தநம்பிகுறிச்சி மணக்கரை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:- எங்கள் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை வேறு பிரிவினர் 60 பேருக்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட பட்டா இடங்களில் வேறு பிரிவினர் குடியேறும் போது, அவர்களுக்கும் எங்களுக்கும் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் நாங்கள் ஊரை காலி செய்ய நேரிடலாம். சில அரசு அதிகாரிகள் பணத்தை வாங்கி கொண்டு இடத்தை பட்டா போட்டு வேறு பிரிவினர்களுக்கு கொடுத்து இருப்பதால் பெரும் பிரச்சினை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே வழங்கப்பட்ட பட்டாக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
விளாத்திகுளம், எட்டயபுரம் தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் பலர் படைப்புழு நோயால் பாதிக்கப்பட்ட சோள பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருப்பதாவது:- கோவில்பட்டி கோட்டம், விளாத்திகுளம், எட்டயபுரம் தாலுகாக்களில் ரபி பருவத்தில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், பருத்தி, வெள்ளைசோளம் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளன. விதைக்கப்பட்ட நாளில் இருந்து மழை பெய்து வருவதால் பயிர்கள் செழித்து காணப்படுகின்றன.
இந்த ஆண்டு மக்காச்சோளம் அதிக அளவில் பயிர் செய்யப்பட்டு உள்ளன. தற்போது படைப்புழு என்னும் நோயால் குறுத்து பூச்சி உற்பத்தியாகி சோளத்தண்டு பகுதியை முழுவதுமாக அழித்துவிடுகிறது.
இதனை கட்டுப்படுத்த போதிய மருந்து தெளித்தும் பயன் இல்லை.
இதனால் மக்காச்சோளம் விளைச்சல் கடும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே விளாத்திகுளம், எட்டயபுரம் தாலுகாக்களில் உள்ள வெம்பூர், அழகாபுரி, மெட்டில்பட்டி, அயன் வடமலையாபுரம் பகுதிகளில் நோயால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோடு மேம்பாலம் ராஜபாண்டிநகரை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில், ‘எங்கள் பகுதிக்கு கடந்த 2 மாதங்களாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. குடிநீர் வடிகால் வாரியத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எங்களுக்கு உடனடியாக தண்ணீர் வழங்க வேண்டும். அதே போல் எங்கள் பகுதியில் சாலைகள் பராமரிப்பு இன்றி உள்ளது. அதனை பழுது பார்த்து தர வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் 300 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள், வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்.
மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி கொசு பரவும் அபாயம் உருவாகி உள்ளது.
எனவே பழுதடைந்த சாலையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 மின்தூக்கிகள் (லிப்ட்) உள்ளன. இதில் ஒன்று பல மாதங்களாக பழுதடைந்து காணப்படுகிறது.
இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும். மேலும் இந்த மின்தூக்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. பழுது சரிசெய்த பின்னர் மின்தூக்கிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் கொண்டு வர வேண்டும்.
தூத்துக்குடி, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு, எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் தாலுகாக்களில் தனியார் காற்றாலை நிறுவனத்தால் அகற்றப்பட்ட கிராம எல்கை கற்கள் மற்றும் நிலங்களை அளவீடு செய்திட உதவிடும் அரசின் கண்டக்கல்களை சரியான அளவுகளில் அமைத்திட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story