கடலூரில் பயங்கரம்: குழவி கல்லை தலையில் போட்டு பெண் கொலை - கள்ளக்காதலன் கைது


கடலூரில் பயங்கரம்: குழவி கல்லை தலையில் போட்டு பெண் கொலை - கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 20 Nov 2018 3:15 AM IST (Updated: 20 Nov 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் குழவி கல்லை தலையில் போட்டு பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர், 


தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 42). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். வெள்ளைச்சாமி 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து தனலட்சுமி கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி, துப்புரவு வேலை பார்த்து வந்தார்.

அப்போது தனலட்சுமிக்கும், அந்த விடுதியில் தங்கிய கடலூர் முதுநகரை சேர்ந்த பெயிண்டர் சரவணன்(45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் அவர்களிடையே கள்ளக்காதலாக மாறியது. சரவணன் திருமணம் ஆகாதவர் என்பதால் தனலட்சுமியும், அவருடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார். அதன்படி கடந்த 3 மாதமாக தனலட்சுமியும், சரவணனும் கடலூர் கூத்தப்பாக்கம் பாரதியார் நகரில் உள்ள பாலகணபதி கோவில் அருகில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இதற்கிடையே தனலட்சுமிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக சரவணனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை சரவணன் நேற்று முன்தினம் தனலட்சுமியிடம் கேட்டு தகராறு செய்தார்.

இதில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சரவணன் அருகில் கிடந்த குழவி கல்லை எடுத்து தனலட்சுமியின் தலையில் போட்டார். இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தனலட்சுமியின் தங்கை அமுதவள்ளியிடம் செல்போனில் தெரிவித்து விட்டு சரவணன் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அமுதவள்ளி திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு வீட்டில் பதுங்கி இருந்த சரவணனை நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் அவரை கடலூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

Next Story