ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் கலெக்டரிடம் ஒப்பந்த தொழிலாளர்கள் வலியுறுத்தல்
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கலெக்டரிடம் ஒப்பந்த தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்த தொழிலாளர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரியிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறி இருந்ததாவது;-
நாங்கள் பல ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையில் ஒப்பந்த முறையில் பணிகள் செய்து வந்தோம். இந்த ஆலை இங்கு இயங்கப்பட்டதில் இருந்து பலதரப்பட்ட உள்ளுர்வாசிகளுக்கு வேலை வாய்ப்பு அளித்து அவர்களின் வாழ்வாதாரத்துக்கு முக்கிய காரணமாக இருந்து வந்தது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னர் எங்களின் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டது. எங்களின் வாழ்வாதாரம் முடங்கியது.
ஆலை மூடப்பட்ட பின்னர் அரசு கூறியப்படி இங்கு பணியாற்றிய யாருக்கும் மாற்று வேலை, தொழில் ஏற்பாடு செய்யப்படவில்லை. ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் இந்த ஆலையை நம்பி இருந்ததை அரசு கருத்தில் கொள்ளவில்லை. ஆலை தொடங்கப்பட்டதில் இருந்து பணியாற்றி வரும் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. தற்போதுஆலை மூடப்பட்ட பின்னர் எங்களின் எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளது. எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு, நல்ல முறையில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story