மேலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு நிறைமாத கர்ப்பிணி பலி; பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் சாவு


மேலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு நிறைமாத கர்ப்பிணி பலி; பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் சாவு
x
தினத்தந்தி 19 Nov 2018 10:30 PM GMT (Updated: 19 Nov 2018 8:30 PM GMT)

மேலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு நிறைமாத கர்ப்பிணி பெண்ணும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு பெண் பன்றி காய்ச்சலுக்கும் பலியானார்கள்.

மேலூர்,

மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில வாரங்களாகவே பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆங்காங்கே தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், காய்ச்சல் பரவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இருப்பினும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பலரும் காய்ச்சலால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் மேலூர் அருகே உள்ள சாலக்கிப்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி. எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி வீரசிகாமணி. இவர்களுக்கு தாருன்யாஸ்ரீ, தன்யாஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில் தற்போது வீரசிகாமணி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவர் மேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை. அதன்பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வீரசிகாமணிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துபோனார்.

மர்ம காய்ச்சல் பாதிப்பால் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சாலக்கிப்பட்டி கிராமத்தை சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை சேர்ந்தவர் ஷேக்இப்ராகிம். இவருடைய மகள் சுல்தான்பேகம் (28). கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை. இதனை தொடர்ந்து அவர் கடந்த 17–ந்தேதி மேல்சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, சுல்தான்பேகத்திற்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதன்பிறகு தனி வார்டில் வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று சுல்தான்பேகம் பரிதாபமாக இறந்துபோனார்.


Next Story