பாலியல் ரீதியான துன்புறுத்தலை கண்டறிந்தால் தபால் அனுப்பலாம் கலெக்டர் அன்பழகன் பேச்சு


பாலியல் ரீதியான துன்புறுத்தலை கண்டறிந்தால் தபால் அனுப்பலாம் கலெக்டர் அன்பழகன் பேச்சு
x
தினத்தந்தி 19 Nov 2018 10:45 PM GMT (Updated: 19 Nov 2018 8:33 PM GMT)

ஆசிரியர்கள்-மாணவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலை கண்டறிந்தால் தபால் அனுப்பலாம் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் அன்பழகன் பேசினார்.

கரூர்,

கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சமூக பாதுகாப்புத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில், குழந்தைகள் துன்புறுத்தப்படுவதை தடுத்து அவர்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமை, குழந்தை திருமணம், கல்வி இடைநிற்றல், பாலியல் ரீதியான துன்புறுத்தல் ஆகியவற்றை கண்டறிந்தால் ஆசிரியர்கள், மாணவர்கள் அது பற்றிய தகவல் குறித்து கடிதம் எழுதி, தாந்தோன்றிமலை கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரேயுள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தபால் அனுப்பலாம்“ என்றார்.

தொடர்ந்து பெண் கல்வியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள், இடஒதுக்கீடு விவரம் ஆகியன குறித்து எடுத்துரைக்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சியின் போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் முகவரி அச்சிடப்பட்ட தபால் கடிதம் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சு.கவிதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நன்னடத்தை அதிகாரி தேவகி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜான்சி, மாவட்ட கல்வி அதிகாரி கனகராஜ், இலவச சட்டப்பணிகள் ஆணைகள் குழு உறுப்பினர் சொக்கலிங்கம் உள்பட மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story