தகராறை சமாதானம் செய்த தொழிலாளி அடித்துக்கொலை அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது


தகராறை சமாதானம் செய்த தொழிலாளி அடித்துக்கொலை அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 20 Nov 2018 4:15 AM IST (Updated: 20 Nov 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறை சமாதானம் செய்த தொழிலாளி அடித்துக்கொலை செய்த அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நந்திமாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். அதே ஊரை சேர்ந்தவர் மதியழகன். இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல்- வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

நேற்று முன்தினம் மதியழகன் மற்றும் அவரது மகன்கள் சதீஷ் (வயது 24), ஜெகதீஷ்(22) மற்றும் அதே ஊரை சேர்ந்த யோகேஸ்வரன்(18) ஆகியோர் பஞ்சவர்ணம் வீட்டிக்கு சென்று தகராறு செய்தனர். அப்போது அவர்களை பஞ்சவர்ணத்தின் மகன்கள் பாபு, கோபு ஆகியோர் தட்டிகேட்டனர். இதனால் பாபு, கோபுவையும் அவர்கள் உருட்டு கட்டையால் தாக்கியதாக தெரிகிறது.

அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த கூலித் தொழிலாளியான சீனிவாசன்(40) இருதரப்பினரையும் சமாதானம் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ், ஜெகதீஷ் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் சீனிவாசனை உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் உயிரிழந்தார்.

இதுகுறித்து சீனிவாசனின் மனைவி மனிமேகலை கொடுத்த புகாரின் பேரில் விக்ரபாண்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ், ஜெகதீஷ், யோகேஷ்வரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story