கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில்: போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் - தமிழக அரசுக்கு, கி.வீரமணி கோரிக்கை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெய்வேலி,
திராவிடர் கழக கடலூர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சீனியம்மாள் என்பவர் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரது படத்திறப்பு விழா நெய்வேலி ஆர்ச் கேட் அருகே நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயல் மீண்டும் தாக்குமோ என்று பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தற்போது அச்சத்தில் உள்ளனர். வீடு, வாசல் இழந்து மின்சாரம் இன்றி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாகியும் கூட பிரதமர் மோடியோ, மத்திய உள்துறை மந்திரியோ நேரடியாக வந்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்கவில்லை. உள்துறை மந்திரி தொலைபேசியில் மட்டும் பேசியுள்ளார்.
மத்திய அரசு தமிழகத்தை ஒருபொருட்டாகவே மதிக்கவில்லை. ஏனென்றால் தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது, காவி மண்ணாக மாற்ற முடியாது என்ற நிலை உள்ளது. இதற்கு மக்களின் வன்மையான கண்டனத்தை பொதுநல அமைப்பின் சார்பில் தெரிவிக்கிறோம்.
மத்திய அரசு மக்கள் அரசாக இருந்தால் நிவாரண பணிகளை செய்திருக்கும். மக்களின் கோரிக்கைகளையும், குமுறல்களையும் உள்ளுணர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும். வரும் முன் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசு, புயல் வந்த பிறகு நிவாரண பணிகளை முழுமையாக செய்து முடிக்கவில்லை. எனவே போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை முடிக்க வேண்டும்.
இதில் கட்சிகள், அமைப்புகள், சாதி மதம் பார்க்காமல் மனிதநேயத்தோடு பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவது எப்படி? கைதூக்கி விடுவது எப்படி? என்று ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.
இவ்வாறு கி.வீரமணி கூறினார்.
அப்போது மாநில பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், வடக்குத்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகன், வடலூர் சூரியமூர்த்தி, மண்டல தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story